Monday, October 21, 2013

பாரதிராஜா அழைத்தார் ! பாலுமகேந்திரா நெகிழ்ந்தார்!

ஓவியர் அப்துல் ரவூப் நிஸ்தார்!


தனக்கான தகுதியுள்ளவர்களை சினிமா எங்கிருந்தாலும் தேடி ஈர்த்துக்கொள்ளும். அப்படித்தான் ஓவியர் ரஹமத் என்கிற ரவூப் நிஸ்தாரையும் அழைத்து வந்திருக்கிறது.

எங்கோ மதுரையில் ஓவியங்கள்,விளம்பரங்கள்,மேடை அமைப்புகள் என்றிருந்த அவரை சென்னை வரவழைத்திருக்கிறது. ஸ்டோரி போர்டுகள் வரைவதில் ஈடுபடுத்தி கலை இயக்குநராக அழைத்துள்ளது.



யாரிந்த ரஹமத்.. ?

எனக்குச் சொந்த ஊரு மதுரை. என் அண்ணன் இக்பால் நன்றாக படம் வரைவார். அதைப் பார்த்த நாமும் ஏன் வரையக் கூடாது என்று நினைத்தேன். ஆர்வம் அதிகரித்து ஓவியங்களில் இறங்கி விட்டேன்.உலகின் எல்லா வகை ஓவியங்களின் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது.விளம்பரப் போர்டுகள், உருவப் படங்கள், மேடை அலங்காரப் படங்கள் என்று தொழிலானது. வருமானமும் வந்தது. வருமானம் இரண்டாம் சந்தோஷம்தான். முதல் சந்தோஷம் நினைத்ததை வரைய முடிகிறது என்பதுதான். மேடை உருவாக்கியது என்கிற வகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு கலை இரவுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சுமார் 20 ஆண்டுகள் மேடை ஓவியங்கள்,மேடை அமைப்பு என்னுடையதுதான்' என்கிறார்.

பியூசி வரை படித்த இவரது இயர்பெயர் அப்துல் ரவூப் நிஸ்தார். செல்லப் பெயர் அழைக்கப்பட்ட பெயர்தான் ரஹமத்.இதுநாள் வரை ரஹமத் என்று அழைக்கப்பட்டு அறியப்பட்டவர். இனி இயற்பெயரிலேயே தொடர விரும்புகிறார். அதுதான் பெயர் வைத்து பெற்றோருக்கு மரியாதை என்று நம்புகிறார்.


ஓவியத்துறையில் ஈடுபாடு கொண்டு அவ்வுலகில் வாழ்பவர்களுக்கு பொருளாதாரம் கை கொடுக்குமா ? 
"நான் இதை தொழில் முறையாக மதுரையில் செய்து கொண்டிருந்தேன். எனவே பணக் கஷ்டமில்லை 'நீ சினிமாவுக்கு போ' என்று பலரும் கூறிய போது வந்து கொண்டிருக்கிற வருமானத்துக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாதே என்று நினைத்தேன். அது மட்டுமல்ல இதுவே மனதிருப்தியாக இருப்பதாக நினைத்தேன் ' என்றவர். தான் இதுவரை வரைந்த ஓவியங்களை அவ்வப்போது மதுரை பகுதிகளில் கண்காட்சியாக்கினார். நண்பர்கள் தூண்டுதளில்தான் இதைச் செய்திருக்கிறார். ஆனால் அது குடத்திலிட்ட விளக்காக இருந்த அவரது திறமையை குன்றியிட்ட விளக்காக மாற்றியது.



எந்த அளவுக்கு?

ஒருமுறை இவரது கண்காட்சிக்கு இயக்குநர் பாரதிராஜா வந்திருந்தார். சென்னைக்கு அழைத்திருக்கிறார். ஆனால் இவர்தான் வரவில்லை. சென்னையில் ஓவியக் கண்காட்சி வைக்கவும் தூண்டியிருக்கிறார். ஒரு பேட்டியில் இன்று என்ன விசேஷம் என்ற பாரதிராஜாவிடம் கேட்ட போது 'இன்று மதுரையில் ரஹமத்தின் ஓவியங்கள் தான் விசேஷம் பேசப்படுகிற ஒன்று' என்று கூறியிருக்கிறார்.

பாரதிராஜாவை கௌரவிக்கும் வகையில் அவரது அம்மாவின் ஓவியத்தை வரைந்து கொடுக்க, அவரோ நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.ஜூலை 13ல் சென்னையில் முதல் ஓவியக் கண்காட்சியையும் ரஹமத் நடத்தியிருக்கிறார்.

கண்காட்சிக்கு தலைமையேற்ற பாலுமகேந்திரா இவர் வரைந்த 'வயோதிகம்' என்கிற ஓவியத்தை ரசித்து நெகிழ்ந்து விலை கொடுத்து வாங்கியும் பெருமை செய்திருக்கிறார். இவரது ஓவியக் கண்காட்சிகளுக்கு "இயக்குநர்கள் பாலா, அமீர், பார்த்திபன், வசந்தபாலன்,நடிகை ரேவதி என்று தொடங்கி ஆன்மீக உலகத்தைச் சேர்ந்த குன்றக்குடி அடிகளார் வரை வந்து பாராட்டியுள்ளனர்.

கலை இரவுகளுக்காக இவர் வடிவமைத்த மேடைகளை நிகழ்ச்சிக்கு வரும். விஐபிக்கள் பாராட்டிப் பேசியதுண்டு. ஒருமுறை 30,000 பேர் கூடிய கூட்டத்தில் இயக்குநர் இவரைப் பாராட்டியதும், இவர் மேடை அமைப்பதை வரையும் ஓவியத்தை விடிய விடிய உடனிருந்து உற்று நோக்கி ஓவியர் மருது பாராட்டியதும் நெகிழ்வுக்குரியது நிகழ்வுகளாகக் கருதுகிறார்.


எந்தப் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று ஓவியம் கர்றுக் கொள்ளாத இவர் பல அமைப்புகளின் ஓவியப் போட்டிகளுக்கு நடுவராக இருந்திருக்கிறார். தன்னைவிட ஓவியத்துக்கு கலைக்கு கிடைத்த பெருமையாக இதைக் கருதுகிறார்.

இவர் அழுத்தமாக கூறுகிறார் இப்படி 'எல்லாரிடமும் திறமை இருக்கிறது வளர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வரையும் ஓவியங்கள் வியப்பூட்டுகின்றன நல்ல ஓவியங்களை ரசிக்கிற குணம் எல்லா தரப்பு மக்களிமும் இயல்பாகவே இருக்கிறது' இதுவரை இவர் பத்தாயிரம் உருவ ஓவியங்களையாவது வரைந்திருப்பார். உலகநாடுகளுக்கெல்லாம் சென்றிருக்கின்றன. இதுவரை சினிமாவைத் தவிர்த்து வந்தவர். இப்போது கலை இயக்கத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். ஓவியங்கள்,சிற்பங்கள்.ப்ளாஸ்டக்,ஆப் பாரீஸில் படைப்புகள் என்று ஈடுபடும் இவருக்கு இசையிலும் தாகம் உண்டு. ராகங்கள் அறிந்தவர். சிறப்பு தபலா கலைஞர்.

ரஹமத் என்கிற அப்துல் ரவூத் நிஸ்தார் நடத்தும் சென்னையில் வருகிற 21.10.13 முதல் 31.10.13 வரை வின்யாசா பிரிமியர் ஆர்ட் கேலரி,சி ஐ டி காலனி, மயிலாப்பூரில் நடைபெறவுள்ளது.ஓவியர் விஸ்வம் திறக்கவுள்ளார்.திரைப்பட கலை இயக்குநர் ஜேகே பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்.

வண்ணங்களோடும் வரிகளோடும் வாழ்க்கை நடத்தும் நிஸ்தாரின் கனவுகள் மெய்ப்படட்டும்.


  
 







No comments:

Post a Comment