Saturday, October 26, 2013

சுட்டகதை விமர்சனம் -போங்கப்பா… நீங்களும் உங்க சுட்ட கதையும்…




வெளிநாடு வாழ் இந்தியரான ரவீந்தர் தமிழ் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக படம் எடுப்பதற்காக சுவிஸ்ஸிலிருந்து கிளம்பி சென்னை வந்தார். முதல் வேலையாக ஆறு படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். அவருடைய முதல் தயாரிப்புதான் சுட்டகதை படம். இந்தப் படம் ரிலீசுக்குத் தயாரானதுமே வேந்தர் மூவிஸ் படத்தை வாங்கினார்கள். வாங்கியவர்கள் மாதக் கணக்கில் படத்தை கிடப்பில் போட்டுவிட சற்றே கோபத்துடன் தயாரிப்பாளர் ரவீந்தர் படத்தை திரும்ப வாங்கி தானே சொந்தமாக ரிலீஸ் செய்திருக்கிறார். வேந்தர் மூவீஸ் இந்தப் படத்தை 50 திரையரங்குகளில்தான் ரிலீஸ் செய்ய முடியும் என்று சொன்ன நிலையில் படத்தை 100க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்கிறாராம் ரவீந்தர்.
மலையோர கிராமத்தின் தலைவனான கதாநாயகியின் அப்பா பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார் என்கிற துப்புத் துலக்கும் பணியில் ஈடுபடுகிறது காவல்துறை. கொலையாளி யார் என்பதைக் கண்டு பிடித்தார்களா இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.
இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் புதிய முயற்சி, காமிக்ஸ் அடிப்படையில் அமைந்த படம் என்றெல்லாம் சொன்னார் இயக்குநர். ஆனால் படமோ காமிக்ஸ் புத்தகத்திற்கு விளம்பரம் செய்ய எடுக்கப்பட்டது போன்று இருக்கிறது.
படம் துவங்கியதிலிருந்து ரொம்ப நேரத்திற்கு கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதே பிடிபடவில்லை. சிரிக்க வைக்கிறேன் என்கிற பேரில் இவர்கள் அடிக்கும் ரகளையில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சிரித்து வைக்க முடிகிறது. மற்ற இடங்களில் எல்லாம்… நற… நற…
ஏற்கனவே சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கும் பாலாஜி இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு நண்பராக வருகிறார் வெங்கடேஷ். இருவரும் நடிப்பில் சபாஷ் போட வைத்திருக்கிறார்கள். கதாநாயகியாக நடித்திருக்கிறார் லஷ்மிப்ரியா சந்திரமௌலி. தர்மயுத்தம் டிவி தொடரில் தலை காட்டியவர் இந்தப் படத்தில் கதாநாயகியாகியிருக்கிறார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரொம்பவே வீரமான பெண் கேரக்டர் இவருக்கு. காவல்நிலையத்தில் சதா சர்வகாலமும் தூங்கி எந்திரிக்கும் ஆய்வாளராக வருகிறார் நாசர். அவரை அங்கில் என்று கூப்பிடும் போலீஸ்கார பையன் மட்டும் ஓரிரு இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். ஜெயப்பிரகாஷ், லஷ்மி ராமகிருஷ்ணன், சிவாஜி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். லஷ்மி ராமகிருஷ்ணன் எண்ணி நாலைந்து காட்சிகளில் வந்து போகிறார். இதே நிலைதான் ஜெயபிரகாஷ்க்கும்.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் மேட்லி ப்ளூஸ். பின்னணி இசையை காமெடிக்காக தாறுமாறாக இசைக்க விடுவார்கள் சில இசையமைப்பாளர்கள். ஆனால் மேட்லியோ ஹ்யூமரான காட்சிகளில் எல்லாம் அருமையாக பின்னணி இசையமைத்திருக்கிறார். பாரில் பாடும் பாட்டு மட்டும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சுபு. கோடைக்கானலில் காட்டுப் பகுதிகளில் போய் படமாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகளை இருட்டில் லைட்டை ஒளிரவிட்டுப் படமாக்கியிருக்கிறார்கள். அதுவும் ஏகப்பட்ட விளக்குகள். படம் தொடங்கியதில் இருந்து முடிகிற வரைக்கும் ரொம்பவே ஸ்லோவாக நகருகிறது. திரைக்கதை சுவாரஸ்யமாகவும் இல்லை. அதே நேரத்தில் படத்தில் ட்விஸ்ட் வந்துவிட்டது… என்கின்றனர் கேரக்டர்கள். ட்விஸ்ட் வந்தால் படம் பார்ப்பவர் நிமிர்ந்து உட்கார வேண்டுமே… அதுதான் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் என்னமோ போங்கடா… நீங்களும் உங்கள் சுட்டகதையும் என்கிற அளவுக்கு வர வைத்து விடுகிறார்கள்… மொத்தத்தில இந்தப் படத்தைப் பார்க்கப் போயி தலைவலி வந்ததுதான் மிச்சம்…

No comments:

Post a Comment