Friday, October 11, 2013

தமிழகத்தின் பெரும் அதிர்ச்சி பாஸ் இது!



வில்லிவாக்கத்திலிருந்து கோயம்பேடு போக வேண்டியிருந்தது. மீட்டர் பொருத்தச்சொல்லி எடுக்கப்பட்ட நடவடிக்கை எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கலாம்னு கால் டாக்ஸியை தேர்வு செய்யாமல் ஆட்டோவில் போக முடிவு செய்தேன். முதலில் வந்தவர் 200 ரூபாய் என்றார். அடுத்து வந்தவர் 150 என்றார்.. “100 ரூபாய் தான் தர முடியும்” என்றேன். முடியாது என்று போய்விட்டார்.
“சரிதான்.. தமிழ் நாட்டு ஆட்டோக்காரர்கள் நாய் வால் மாதிரி.. திருத்த முடியாது..” என்று நினைத்தபோது, ஒரு ஆட்டோ வந்தது. “கோயம்பேடு போகணும்.. எவ்வளவு..” என்றேன் சலிப்போடு..
“மீட்டர் சார்ஜ் தான்.. உக்காருங்க..” என்று அந்த ஆட்டோ டிரைவர் கூறியபோது இன்ப அதிர்ச்சியில் எனக்கு மயக்கமே வந்துவிடும்போலிருந்தது.
கோயம்பேடு போய் சேரும்வரை மீட்டரையே கவனித்துக் கொண்டிருந்தேன்.. வெறும் 69 ரூபாய் தான் மீட்டரில் வந்தது. பாவிகளா.. 200 ரூபாய்.. 150 ரூபாய் என்று ஆட்டோ கட்டண கொள்ளையர்கள் கேட்ட தொகைக்கும் மீட்டரில் விழுந்த தொகைக்கும் எவ்வளவு வித்தியாசம். இவ்வளவு நாளா எங்களை எவ்வளவு கொள்ளையடிச்சிருக்கீங்க.. இப்போவாவது பூனைக்கு மணி கட்டிருக்காங்களேனு சந்தோசமா இருந்துச்சு.
மீட்டர் போட்டு ஓட்டிய அந்த டிரைவரின் கையைப்பிடித்து, “இப்படியே ஓட்டுங்க.. நிறையபேர் பஸ்ஸுக்கு காத்திருக்காம உங்க ஆட்டோல வந்து ஏறுவாங்க..” என்று வாழ்த்து சொல்லிவிட்டு சந்தோசமாக கூடுதலாக பணம் கொடுத்தேன்.
அப்போது , “நாங்க நேர்மையா வண்டி ஓட்ட தான் ஆசைப்படுறோம் சார். ஆனா தொடர்ந்து மீட்டர் போட்டு ஓட்டுறது எங்க கைல இல்ல. இப்போ வெறும் ரெண்டு மூணு சதவீதம் பேர் தான் இப்படி ஓட்டுறோம். மீதிபேர் பழையபடிதான் மீட்டர் போடாம ஓட்டுறாங்க. இதை அதிகாரிகள் கடுமையா கண்காணிச்சாங்கனா எல்லாரும் மீட்டர் போட்டு ஓட்டுவாங்க.. ஆனா அப்படி செய்யலனா எங்களையும் அந்த ஆட்கள் கெடுத்துருவாங்க.. உண்மையிலே நாங்க எல்லாரும் மீட்டர் போட்டு ஓட்டுனோம்னா நிக்க நேரம் இருக்காது.. அவ்வளவு சவாரி வரும்.. ஆனா எங்க ஆளுங்க பண்ற அட்டகாசத்தால பலபேர் கால் டாக்ஸி புக் பண்ணிட்டு போய்டுறாங்க..” என்றார் அவர் வருத்தமாக ..
இவர்களைப்போன்றவர்களை நேர்மையாக மீட்டர் போட்டு ஓட்டுவதற்கு நாமும் உதவ வேண்டும். மீட்டர் போடாமல் இஷ்டத்திற்கு பணம் கேட்கும் ஆட்டோக்களில் ஏறாமல், உடனடியாக 044-26744445, 044-24749001 என்ற எண்களுக்கு ஆட்டோ நம்பரை குறிப்பிட்டு புகார் தெரிவியுங்கள்.. நடவடிக்கை எடுப்பார்கள்.. ( இந்த நம்பரை உங்கள் செல்போனில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்)
நாலுபேர் மீது நடவடிக்கை எடுக்கும்போதுதான் மற்ற ஆட்டோ கட்டண கொள்ளையர்களும் வழிக்கு வருவார்கள்.

No comments:

Post a Comment