Friday, October 11, 2013

வணக்கம் சென்னை - கிருத்திகா உதயநிதி, நீங்கல்லாம் நல்லா வருவீங்க…!



பிரபலங்கள் வீட்டில் இருந்து யாராவது படம் இயக்கப் போகிறேன் என்று கிளம்பி கோடம்பாக்கம் வந்துவிட்டால், படம் பார்க்க போகிற ரசிகர்கள் உயிரை கையில் பிடிச்சிட்டுதான் போகவேண்டி இருக்கு. ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் அனைவரையும் வதைத்ததை ரசிகர்கள் அறிவார்கள். இந்த வரிசையில் கிளம்பியிருக்கும் கிருத்திகா உதயநிதி மட்டும் ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட்டுடுவாங்களா என்ன?
தேனி பக்கம் ஒரு கிராமத்தில இருந்து சென்னைக்கு வருகிற ஹீரோ, லண்டன்ல இருந்து சென்னைக்கு வருகிற ஒரு தமிழ் பொண்ணு… இவங்க ரெண்டு பேரும் ஒரே பிளாட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. முதலில் ஒருவரை ஒருவர் விரோதியாகவே பார்த்துக் கொள்கிறார்கள். கதாநாயகன் சிவாவுக்கு கதாநாயகி ப்ரியா ஆனந்த் மேல் மெல்ல காதல் வர, அதன் பிறகுதான் தெரிகிறது ப்ரியா ஏற்கனவே நிச்சயம் ஆன பெண் என்று. அதன் பிறகு காதல் என்னவாகிறது? ப்ரியாவுக்கு சிவா மீது காதல் வந்ததா என்பதை மீதி கதை சொல்கிறது.
படத்தின் முதல் பாதி சந்தானம் இல்லாமலேயே ரசிக்கும்படியாக நகருகிறது. படத்தின் இடைவேளைவாக்கில்தான் சந்தானம் என்ட்ரி கொடுக்கிறார். இடைவேளைக்குப் பிறகு படம் முழுவதும் சந்தானம் வந்த போதிலும் படம் தொய்ந்து விழுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஹீரோவாக சிவா அவருடைய டெம்ப்ளேட் படங்களின் வரிசையில் கண்ணை மூடிக் கொண்டு இந்தப் படத்தையும் சேர்த்துவிடலாம். ஆனால் என்ன மற்ற படங்களை விட இந்தப் படத்தை கொஞ்சம் செலவு செய்து ரிச்சாக எடுத்திருக்கிறார்கள். கதாநாயகியாக ப்ரியா ஆனந்த். நடிப்பதற்கு நிறைய காட்சிகள் இருந்தும் அவற்றில் பெரும்பாலானவற்றில் இயல்பான நடிப்பில் ஓ.கே. சொல்ல வைக்கிறார். ஆனாலும் இவரது முகம் மட்டும் மனதில் ஒட்டவே மாட்டேங்கிறது. நாராயணன் கேரக்ரில் வரும் சந்தானம் காமெடியுடன் குணச்சித்திரத்திலும் தன் பங்களிப்பை செய்திருக்கிறார். ப்ளாக் பாண்டி, லொள்ளுசபா சாமிநாதன், ஆர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போகிறார் நாசர். இன்ஸ்பெக்டராக வருகிறார் ஊர்வசி. வழக்கறிஞராக வரும் சங்கீதாவுக்கும் ஒரே ஒரு காட்சி மட்டுமே. ப்ரியா ஆனந்தின் அப்பாவாக வருகிறார் நிழல்கள் ரவி.
சில இடங்களில் செட்தான் கண்ணுக்கு உறுத்தலாக இருக்கிறது. ரிச்சாக காட்ட வேண்டும் என்பதற்காக தாறுமாறாக பின்னணி வண்ணங்களை பயன்படுத்துவது கதாப்பாத்திரங்களை விட்டுவிட்டு அந்த செட் மீது நம் பார்வை திரும்புவதை தடுக்க முடியவில்லை. பெயரைப் போலவே படத்தையும் ரிச்சாக காட்டுகிறது ரிச்சர்ட் நாதனின் கேமிரா. அனிருத் இசையில் ‘எங்கடி பொறந்த பாடல்’ ரசிக்கலாம். படம் முடிந்த பிறகு வரும் அந்த ப்ரமோ பாடலை பார்க்க கூட விருப்பம் இன்றி எல்லாரும் தியேட்டரை விட்டு வெளியே போயிடுறாங்க. அப்புறம் எதுக்கு அந்தப் பாட்டை சேர்த்தாங்களோ…
படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்கள் கிருத்திகா உதயநிதி, திவ்யநாதன் இருவரும். இந்தப் படத்தில் கதையைக் கூட ஜீரணித்துவிடலாம், ஆனால் திரைக்கதை என்ற ஒன்றைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகான திரைக்கதை காட்சிகளில் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் எடுத்து பணம் சம்பாதிக்கணும்ங்கிற நிலையில் நிச்சயம் நீங்கள் இல்லை எனும் போது ஏன் இது மாதிரியான காமெடி டிராஜடி படங்களை எடுப்பதற்காக மெனக்கெடுகிறீர்கள். அதுக்கு பதிலாக நல்ல படங்களை எடுக்க முயற்சிக்கலாமே… அல்லது எடுக்கிற படத்தையாவது நல்ல விதமா எடுக்கலாமே…!

No comments:

Post a Comment