Sunday, September 22, 2013

ஒரே ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?




ஒரே ஒருமுறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்? இது வாசகர் ஒருவரின் கேள்வி. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம். ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது.
இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். சிலருக்கு முதல் முறையிலேயே கருத் தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள்.

எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத் தரிக்கலாம் என்பதே நிதர்சனம்.பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள். 85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.
சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம். எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.

No comments:

Post a Comment