எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - நர்ஸம்மா!
மூம்பையிலிருந்து தமிழகம் வந்துக் கொண்டிருந்த ரயிலில் பிச்சைக்காரர்கள் தொல்லை மிக அதிகமாக இருந்தது. முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு கூட ஒருவர் மாற்றி ஒருவர் பிச்சை கேட்டு வந்துக் கொண்டிருந்தார்கள். இதில் சில இளம் பெண்கள் குழந்தைகளை வேறு சுமந்துக் கொண்டு வந்து பிச்சை கேட்டார்கள். அந்த குழந்தைகள் எப்போதும் தூங்கிக் கொண்டிருந்தன. செய்திகளில் வருவது போல் போதை மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்து தூங்க வைத்துவிடுகிறார்களா தெரியவில்லை.
இப்படி பிச்சைக் கேட்டு வந்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே ஒரு பாட்டி பூ விற்றுக் கொண்டு வந்தார்கள். நான் அந்த பாட்டியிடம் பூ இரண்டு முழம் வாங்கி எதிரில் இருந்த வயதான தம்பதிகளுக்கு கொடுத்தேன். பாட்டியின் பூக்கள் விற்று விட்ட படியால் கொஞ்சம் உட்காரலாமா என்று கேட்டார். நான் அவருக்கு இடமளித்து அவரோடு பேசத் தொடங்கினேன். அவரோ கன்னடத்தில்தான் பேசினார். கன்னடத்தில் எனக்கு அத்தனை பயிற்சி இல்லாதபடியால் எதிரில் இருந்த வயதான தம்பதிகள் மூலம் நான் கேள்வி கேட்க பாட்டி, தயங்கி தயங்கி பதில் சொன்னார்.
அதன் பின்னர் பாட்டிக்கு தெலுங்கு தெரியும் என்று தெரிந்துக் கொண்டு நான் அவரோடு தெலுங்கில் உரையாடினேன். பாட்டிக்கு சொந்த ஊர் மந்தராலயா பக்கத்தில் உள்ள அனந்தபூர் என்றார். பாட்டியின் பெயர் நர்ஸம்மா, வயது எவ்வளவு என்று தெரியாதாம். கணவர் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றும், தன் குழந்தைகளை இப்படி பூ விற்றே வளர்த்ததாயும் சொன்னார். சில வருடங்களுக்கு முன் பாட்டியின் ஒரு மகள் இறந்துவிட்டதால், அந்த மகளின் கணவன் (மருமகன்) வேறு ஒரு திருமணம் செய்துக் கொண்டு வேறெங்கோ சென்றுவிட்டானாம். அவன் விட்டு சென்ற இரண்டு மகள்களை பாட்டிதான் வளர்க்கிறாராம்.
பூ விலை மிக அதிகமாக இருப்பதால் பெரிய வருமானம் இல்லை என்றார். ஒரு நாளைக்கு சராசரியாய் நாற்பது முதல் ஐம்பது ரூபாய் கிடைக்குமாம். அதை வைத்துதான் இத்தனை காலமாய் குடும்பம் நடத்துகிறாராம். இப்போது பெரிய பேத்திக்கு பதினைந்து வயது ஆகிவிட்ட படியால் அவளும் அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்து சம்பாதிக்க தொடங்கியுள்ளதாய் சொன்னார். கடைசி வரை சுயமரியாதையோடு சொந்த காலில் வாழ்ந்தால் போதும், வேறு ஒன்றும் வேண்டாம் என்றார் நர்ஸம்மா.
இளமையோடு இருப்பவர்களே பிச்சை எடுத்து திரியும் சூழ்நிலையில் தள்ளாத வயதில் கூட பாட்டியின் சுயமரியாதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரு நூறு ரூபாய் தாளை அவரிடம் கொடுத்து, உங்கள் மகன் கொடுப்பதாய் நினைத்துக் கொள்ளுங்கள் என்றேன். அதை பணிவாக மறுத்துவிட்டு, ஏதாவது பழம் வாங்கி கொடுங்கள் என்றார். ஆப்பிளும் ஆரஞ்சும் வாங்கி தர, சந்தோஷமாய் வாங்கிக் கொண்டார் பாட்டி.
மந்தராலயா ஸ்டேஷன் வந்ததும் விடை பெற்றார் நர்ஸம்மா பாட்டி. கூண் போட்டு நடந்த அவரின் வளைந்த முதுகுகளில், நிமிர்ந்த பாரதம் தெரிந்தது.
Sarvam Krishnarpanam



















No comments:
Post a Comment