Monday, June 29, 2009

கருணாநிதியின்றி திரையுலகம் இல்லை! - கோலிவுட் ஐஸ்

கருணாநிதியின்றி தமிழ் திரையுலகமே இல்லை என தமிழ் திரையுலகப் பிரமுகர்கள் இன்று கருணாநிதியைப் பாராட்டித் தள்ளினர்.

கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் 'நீயின்றி நான் இல்லை' படத்தின் தொடக்க விழா ஏவி எம் ஸ்டுடியோவில் இன்று நடந்தது. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் பகல் 2 மணி வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத் குமார், "தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் புதிய மருத்துவமனை கட்டிடத்தை இன்று திறந்து வைக்க வருகை தரும் முதல்-அமைச்சர் கலைஞருக்கு வரவேற்பு தரும் பொருட்டும், திறப்பு விழாவில் கலந்து கொள்ளவும், இன்று பிற்பகல் 2 மணிவரை தமிழ் திரைப்பட படப்பிடிப்புகளை ஒத்திவைப்பதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி சங்க உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன், இன்று காலை 9-30 மணிக்கு கமலா திரையரங்கம் அருகில் முதல்வரை வரவேற்க, உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்", என்று அறிக்கை விட்டிருந்தார்.

அதே போல தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் விசி குகநாதனும் அறிக்கை விட்டிருந்தார்.

எனவே திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் இந்த விழாவில் குவிந்துவிட்டனர்.

இந்த விழாவுக்கு வருகை தந்த முதல்வர் கருணாநிதிக்கு, 100 அடி சாலையில் இருந்து ஏவி.எம்.ஸ்டூடியோ வரை தமிழ்த் திரையுலகம் சார்பில் நடிகர்களும் திரைப்பட தொழிலாளர்களும் இணைந்து வரவேற்பு அளித்தனர். பின்னர் நீயின்றி நானில்லை படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டார் கருணாநிதி.

விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவக்குமார், சூர்யா, மனோரமா, பெப்சி தலைவர் குகநாதன், பட அதிபர் ஏவிஎம் சரவணன், கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

பெரும்பாலான நடிகர் நடிகைகள் இவ்விழாவுக்கு ஆஜராகியிருந்தனர்.

மேடையில் முதலில் பேசிய விசி குகநாதன், எடுத்த எடுப்பிலேயே மன்னிப்புக் கோரினார் கலைஞரிடம். கருணாநிதி இல்லையேல், தமிழ் சினிமாவே இல்லை என்ற பல்லவியை குகநாதன் துவங்கி வைக்க, அதே ரேஞ்சில் பேசினர் கமல்ஹாசன், ஏவி.எம். சரவணன் உள்ளிட்டோர்.

சுத்தமான தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும். உப்புக்குச் சப்பாணி போல பெயரிட்டால் சலுகைகளை ரத்து செய்து விடுவதாக சமீபத்தில் திரையுலகினரிடம் கண்டிப்புடன் தெரிவித்திருந்தார். இதையடுத்தே இந்த ஐஸ் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment