Monday, June 22, 2009

உழுவதற்கு மாடுகளைப் பயன்படுத்த அமலா எதிர்ப்பு

மிருக வதைக்கு எதிராக குரல் கொடுக்க களமிறங்குகிறார் முன்னாள் நடிகையும் நாகார்ஜுனாவின் மனைவியுமான அமலா.

ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த, விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை அமலா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:

நடிப்புக்கு முழுக்குப் போட்ட பிறகு பல்வேறு பயனுள்ள விஷயங்களைச் செய்து வருகிறேன். இதற்கு என் கணவர் நாகார்ஜுனாவும் உதவியாக உள்ளார்.

மிருக வதைக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வருகிறேன்.

நம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க புளூகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

நம் நாட்டில் மாடுகளை உழவுக்குப் பயன்படுத்துகிறார்கள். அப்போது மாடுகளை கம்பால் அடித்தும் ஊசியால் குத்தியும் சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள். அந் நிறுவனங்கள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்கு புளூகிராஸ் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.

என் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியான நாட்களாக ரஜினியுடன் நடித்ததையே கருதினேன். மிகப் பெருமையாகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகவும் அதைக் கருதினேன்.

ஆனால் நடிப்புக்கு முழுக்குப் போட்ட பிறகு, இதுபோன்ற சமூக சேவையில் ஈடுபடுவதில் அதிக மகிழ்ச்சியை உணர்கிறேன் என்றார் அமலா.

No comments:

Post a Comment