Thursday, July 2, 2009

எந்திரன்-சாபு சிரில் ஓவர் 'பீலா'!

எந்திரன் திரைப்படம் உலகின் மிகச் சிறந்த திரைப்படம் என்பதை நிரூபிக்கும் அளவு அமையும் என்கிறார் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில்.

இந்தியாவின் ட்ரெண்ட் செட்டர் எனும் அளவுக்கு மெகா படங்களுக்கு பிரமாண்டமான செட்களை அமைப்பதில் நிபுணர் சாபு சிரில். ரஜினியின் கனவுப் படமான எந்திரனுக்கு இவர்தான் கலை இயக்குனர்.சென்னைக்கு அருகே மாயாஜால் எதிரே, சாபு சிரில் அமைத்துள்ள பிரமாண்ட செட்தான் இன்றைக்கு கிழக்குக் கடற்கரைச் சாலையின் மிகப்பெரிய சுற்றுலா மையமாகிவிட்டது.

இந்த செட்டுக்கு ஆன செலவு மட்டும் ரூ.5 கோடியாம். இந்திய திரையுலக வரலாற்றில் இத்தனை கோடி செலவழித்து க்ளைமாக்ஸுக்கு யாரும் செட் போட்டதில்லை என்கிறார்கள்.

இந்த மெகா செட்டில்தான் எந்திரனில் விஞ்ஞானியாக வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி 100 ரோபோக்களோடு மோதுவதாக காட்சிகளை எடுக்கிறார்கள். இந்த 100 ரோபோக்களும் விஞ்ஞானி ரஜினியைப் போன்றே தோற்றம் கொண்டவை என்பதுதான் இந்தக் காட்சியின் விசேஷம்.

எந்திரன் சிறப்பு குறித்து ஒரு நாளிதழுக்கு சாபு சிரில் அளித்துள்ள பேட்டி:

"5 ஆண்டு இடைவெளிக்குப் பின் நான் செய்யும் தமிழ் திரைப்படம் எந்திரன் - தி ரோபோ. அதிகமாக பாலிவுட் படங்களைத்தான் இப்போது ஒப்புக் கொள்கிறேன். காரணம், பாலிவுட் படங்களின் பட்ஜெட் பெரியது. பெரிய, வித்தியாசமான செட்களை அமைக்க சரியான களமாக அவை அமைகின்றன.

100 வது படம் எந்திரன்!

எந்திரனைப் பொறுத்தவரை, அது எனக்கு மிகவும் விருப்பமான ஒரு படம். காரணம் இதுதான் எனக்கு 100 வது படம். இந்தப் படத்தோடு இன்று நேற்றல்ல... 10 ஆண்டுகளாக எனக்கு தொடர்புண்டு. இந்தக் கதையை என்னிடம்தான் முதன்முதலில் சொன்னார் இயக்குநர் ஷங்கர். 10 ஆண்டுகளுக்கு முன்பே இதன் கலை இயக்குநராக ஒப்பந்தமாகிவிட்டேன். அப்போது இந்தப் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்துக்கு போட்டோ செஷன் கூட நடந்தது.

ரஜினி - பொருத்தமான தேர்வு!

பின்னர் இந்தப் படத்தில் ஷாரூக் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இப்போது ரஜினிகாந்த் இந்தப்படத்தில் நடிக்கிறார். அவர் இந்தப் படத்துக்கு மிகப் பொருத்தமானவர்...

அலுமினியம் கலந்த உலோகத் தகடுகளால் (Aluminum Composite Panel) இந்தப் படத்துக்கு செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரி செட் இந்தியாவிலேயே எந்திரனுக்குதான் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கு ஆபத்து விளைவிக்காத, மரத்தை விட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செலவு பிடிப்பது இந்த அலுமினியக் கலவை தகடுகள். பார்ப்பதற்கும் மிகப் பிரமாதமான பினிஷிங் கிடைக்கும். விரும்பிய மாதிரி மடக்க முடியும். இன்னொன்று இந்த உலோகத்தை சுழற்சி முறையில் மறு பயன்பாட்டுக்கும் உபயோகிக்கலாம்.

குறித்த பட்ஜெட்டுக்குள் எடுக்கும் விஞ்ஞானப் படங்களில் பணிபுரிவதில் எப்போதுமே அதிக ஆர்வம் உண்டு எனக்கு. ஆனால் ஹாலிவுட்டுக்கு இணையாக இந்தியப் படங்களில் விஞ்ஞான செட்களை அமைப்பதில் உள்ள சவால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அந்த வகையில் எந்திரனுக்கு செட் அமைப்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலாக நினைக்கிறேன். உலகின் மிகச் சிறந்த கலைப் படைப்பாக எந்திரன் அமையும் என்பதை நிரூபிப்பேன்", என்கிறார் சாபு சிரில்.

ஆல் தி பெஸ்ட் எந்திரன் டீம்!

No comments:

Post a Comment