Thursday, July 2, 2009

தாகூரை படித்த ஜாக்சன்-ரஹ்மானுடன் இணையவும் விரும்பினார்


பாப் மேதை மைக்கேல் ஜாக்சன் தனது வாழ்நாளின் கடைசி நாட்களி்ல் ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளை விரும்பிப் படித்து வந்துள்ளார். மேலும், இந்திய இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றவும் ஆர்வத்தோடு இருந்தாராம்.

ரஹ்மானுடன் இணைந்து புதிய ஆல்பம் ஒன்றை வெளியிடும் திட்டத்தில் அவர் தீவிரமாக இருந்துள்ளார். ஆனால் எல்லாமே கை கூடாமல் போய் விட்டது.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தி்ல் ரஹ்மானின் இசையை பார்த்துப் பிரமித்துப் போயே, ரஹ்மானுடன் இணைய ஜாக்சன் ஆர்வம் கொண்டாராம்.

தாகூரின் படைப்புகள் ஜாக்சனை வெகுவாக கவர்ந்து விட்டதாம். இதன் மூலம் இந்தியாவுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் அவர் ஆர்வம் காட்டினாராம்.

இதுகுறித்து ரஹ்மானுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், லாஸ் ஏஞ்சலெஸில் நடந்த ஆஸ்கர் விருது விழாவின்போது ஜாக்சனை சந்தித்தார் ரஹ்மான். அப்போது ரஹ்மானிடம் தனது அடுத்த ஆல்பத்திற்கு இசையமைக்க வேண்டும் என ஜாக்சன் கோரிக்கை வைத்தார்.

இந்த ஆல்பத்தில் இந்திய உணர்வுகளை அதிகம் இடம் பெறச் செய்யவும் ஜாக்சன் திட்டமிட்டிருந்தார். இந்த ஆல்பம் தொடர்பாக அட்னான் சமியுடனும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ஜாக்சன். இந்திய இசைக் கருவிகளான டோலக்கு, தபலா, சாரங்கி ஆகியவற்றையும் பயன்படுத்த திட்டமிட்டிருந்தார் ஜாக்சன் என்றார் அவர்.

யுனிட்டி ஆன்தம் (unity anthem) என்று இந்த ஆல்பத்திற்கு பெயரிட்டிருந்தார் ஜாக்சன். ஏற்கனவே ஜாக்சனும், ரஹ்மானும் ஏகம் சத்யம் என்ற பெயரிலான இசை வடிவத்திற்காக இணைந்தவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

இந்திய இசைப் பக்கம் ஜாக்சனின் கவனத்தை திருப்பியவர்களில் முக்கியமானவர் ஜாக்சனின் அண்ணனான ஜெர்மைன் ஜாக்சன்தான். அதற்கு முக்கிய காரணம், ஜெர்மைனின் மனைவி ஹலிமா சண்டிகரில் சில காலம் வசித்தவர் என்பதால்.

இதை விட முக்கியமாக ஜாக்சன், கடந்த சில ஆண்டுகளாக இந்து மதம் குறித்தும் ஆர்வம் கொண்டிருந்தாராம். அதுதொடர்பான நூல்களையும் படித்து வந்தாராம்.

இதுகுறித்து சர்வதேச இந்து கழகம் என்ற அமைப்பின் தலைவர் ராஜன் செத் கூறுகையில், தியானம் செய்வது எப்படி என்பது குறித்து ஜாக்சன் படித்து வந்தார். மேலும் ஒரு சுத்த சைவமாகவும் அவர் இருந்தார்.

நான் ஒரு முறை அவரை சந்திக்க நேர்ந்தபோது இந்துக் கடவுள்களான கணேசர், நடராஜர் ஆகியோரின் சிலைகளைக் கொடுத்து விளக்க முயன்றேன். அப்போது எனக்கு நன்றாக தெரியுமே என்றபோது நான் வியந்து போனேன்.

ஒரு முறையாவது அன்னை தெரசாவை சந்தித்து விட வேண்டும் என்று தீராத ஆசையுடன் இருந்தார். ஆனால் நிறைவேறவே இல்லை.

இந்தியா குறித்து மிகவும் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார் ஜாக்சன் என்றார்.

No comments:

Post a Comment