Thursday, July 2, 2009

“கலைஞரின் பாராட்டு எனக்கு எனர்ஜி” -முதல்வர் விழாவில் சூர்யா உருக்கம்!


நீயின்றி நானில்லை படத்தின் துவக்கவிழா.... கோடம்பாக்கமே களை கட்டியிருந்தது! முதல்வர் கலைஞரின் கதை, மற்றும் திரைக்கதை, வசனத்தில் உருவாகும் இப்படத்தை இளவேனில் இயக்குகிறார்.

ஏ.வி.எம் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வரை ஃபெப்சி அமைப்பை சேர்ந்த பல்வேறு பிரிவினர் மேள தாளங்களுடன் வரவேற்றார்கள். மேடையில் இருந்தபடியே ஃபெப்சி அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் கலைஞர். முன்னதாக பேசிய திரையுலக பிரமுகர்கள் அனைவரும், கலைஞருக்கு சினிமா தாய் வீடு என்று வர்ணித்தார்கள். இங்குள்ள பலர் தேர்தல் நேரத்தில் அவரை காயப்படுத்தியதாகவும், அவற்றையெல்லாம் பொருட் படுத்தாமல் தொடர்ந்து அவர் திரையுலகத்திற்கு நல்லது செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்கள். தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் பேசும்போது, “இசைத்தட்டில் ஊசி குத்திக் கொண்டிருந்தாலும், அது இசையைதான் பாடுமே தவிர, வசை பாடாது. அப்படிப்பட்டவர் கலைஞர்” என்று கூறினார்.

இறுதியாக பேசிய முதல்வர், “சில பேர் என்னை காயப்படுத்திவிட்டதாக இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். காயப்படுவதால் நான் வருத்தப்பட மாட்டேன். உடம்புக்கே பெயர் காயம்தான். இந்த காயத்தில் இன்னொரு காயம் பட்டால் என்ன ஆகிவிடப் போகிறது? ஆகவே காயத்தை நான் பெரிது படுத்துவதில்லை. இன்றைக்கு காயப்படுத்தியவர்கள் இன்னும் பத்து நாட்கள் கழித்து அதற்கு மருந்து போட வருவார்கள் என்று எனக்கு தெரியும். மருந்து போட வருபவர்களை விருந்து வைத்து நாம் வாழ்த்த வேண்டுமே தவிர, நாம் பதிலுக்கு பதில் காயப்படுத்துவது நல்லதல்ல” என்றார்.

“என்னுடைய முதல் படமான நேருக்கு நேர் படத்தை பார்த்துவிட்டு என்னை வாழ்த்தியிருந்தார் முதல்வர். அவரிடமிருந்து ஒரு கடிதம் வாங்கி விளம்பரத்தில் போடுவதற்காக காத்திருந்தோம். முதல் நாள் இரவு படத்தை பார்த்தவர், மறுநாள் விடியற்காலை நாலரை மணிக்கே போன் செய்து கடிதம் தயாராக இருப்பதாக சொன்னார். அவரது உழைப்பும் சுறுசுறுப்பும் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். அன்று அவரது பாராட்டு எனக்கு எனர்ஜியாக இருந்தது. ஏனென்றால் நான் குழம்பி போயிருந்த நேரம் அது” என்றார் நடிகர் சூர்யா.

No comments:

Post a Comment