Showing posts with label கோடம்பாக்கம். Show all posts
Showing posts with label கோடம்பாக்கம். Show all posts

Monday, June 29, 2009

சேரன் வழியில் சிஷ்யர்


இயக்குனர் சேரனிடம் உதவியாளராக இருந்தவர் ஜெகன்‌ஜி. இவர் இயக்கிய புதிய கீதை, கோடம்பாக்கம் படங்கள்
ச‌ரியாக போகாத நிலையில் தனது குருவை வைத்து ராமன் தேடிய சீதை படத்தை எடுத்தார். படம் பரவலான பாராட்டைப் பெற்றது. விரைவில் தனது புதிய படமான ரோஜா மல்லி கனகாம்பரத்தை ஜெகன்‌ஜி இயக்குகிறார்.

படம் இயக்க வாய்ப்புகள் இருந்தாலும் அடுத்தவர்களின் இயக்கத்தில் நடிப்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார் சேரன். சொல்ல மறந்த கதையில் தொடங்கிய அவரது நடிப்புப் பயணம் பி‌ரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை அடுத்து மிஷ்கின் இயக்கும் படம் என தொடர்ந்து கொண்டிருக்கிறது.

குருவின் வழியில் ஜெகன்‌ஜியும் இயக்கத்துடன் நடிப்பது என புதிய கொள்கை முடிவெடுத்துள்ளார். மாயாண்டி குடும்பத்தா‌ரில் நடித்த பத்து இயக்குனர்களில் ஜெகன்‌ஜியும் ஒருவர். அந்தப் படத்தைத் தொடர்ந்து நந்தா பெ‌ரியசாமி இயக்கும் மாத்தியோசி படத்திலும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

Wednesday, June 24, 2009

எந்த சினிமா படப்பிடிப்பும் இல்லை; “களை” இழந்து கிடக்கும் சின்ன கோடம்பாக்கம்

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் என்று சொன்னாலே கோபியா...அது சின்ன கோடம்பாக்கம் ஆச்சே... எப்போதும் கோபி பகுதியில் இரண்டு மூன்று சினிமா படப்பிடிப்பு காட்சிகள் நடக்குமே... என்று வியப்போடு கூறுவார்கள்.
அதை நிரூபிக்கும் வகையில் கோபி நகரை சுற்றி உள்ள பச்சை பசெல் வயல் வெளி... சலசலவென ஓடும் வாய்க்கால், மனதை ரம்மியமாக கவரும் கொடி வேரி அணை, பாரியூர் கோவில், பச்சைமலை முருகன் கோவில் இப்படி அனைத்து பகுதியும் சினிமா படப்பிடிப்புகள் எடுக்கும் இடங்கள். கோபி பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் ஒன்றா...இரண்டா?
தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, எங்க சின்ன ராசா, சின்னதம்பி, அரண்மனை காவலன், நாட்டாமை, நட்புக்காக இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ் படங்கள் மட்டுமா... தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என வெளி மாநில படங்களும் நூற்றுக்கணக்கில் கோபி பகுதியில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு படப்பிடிப்புக்கு வருபவர்களுக்கு ஆலோசகராக கள்ளிப்பட்டி ஜோதி என்பவரும் உள்ளார். இப்படி சின்ன கோடம்பாக்கமாக செயல்பட்டு வந்த கோபி பகுதியில் தற்போது மருந்துக்கு ஒரு படம் கூட எடுக்கப்படாமல் களை இழந்து போய் உள்ளது.
சினிமா களை தான் இல்லையே தவிர சினிமா படப்பிடிப்பு எடுக்கும் இடங்கள் மேலும் பல களைகளுடன் இயற்கை சூழல் நிறைந்து காணப்படுகிறது என்பது தான் உண்மை.
கோபி பகுதியில் முன்பு போல் ஏன் படப்பிடிப்பு நடத்த வரமாட்டேன்கிறார்கள் என சினிமா ஆர்வலர்களிடம் கேட்டபோது:-
இப்போது படம் எடுப்போர் பெரும்பாலோர் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்கள். ஒரு பாடல் காட்சி எடுக்க கூட அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா என பறந்து விடுகிறார்கள். இங்குள்ள இயற்கை காட்சிகளை ஏனோ அவர்கள் மறந்துவிடுகிறார்கள் என்று கூறினர்.
கோபி பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடந்தால் பல தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் கைநிறைய சம்பளமும் கிடைக்கும் அது கிடைக்காமல் பல தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர். சின்ன கோடம்பாக்கம் மீண்டும் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு களையுடன் காணப்படுவது இனி எப்போதோ...?