ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் என்று சொன்னாலே கோபியா...அது சின்ன கோடம்பாக்கம் ஆச்சே... எப்போதும் கோபி பகுதியில் இரண்டு மூன்று சினிமா படப்பிடிப்பு காட்சிகள் நடக்குமே... என்று வியப்போடு கூறுவார்கள்.
அதை நிரூபிக்கும் வகையில் கோபி நகரை சுற்றி உள்ள பச்சை பசெல் வயல் வெளி... சலசலவென ஓடும் வாய்க்கால், மனதை ரம்மியமாக கவரும் கொடி வேரி அணை, பாரியூர் கோவில், பச்சைமலை முருகன் கோவில் இப்படி அனைத்து பகுதியும் சினிமா படப்பிடிப்புகள் எடுக்கும் இடங்கள். கோபி பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் ஒன்றா...இரண்டா?
தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, எங்க சின்ன ராசா, சின்னதம்பி, அரண்மனை காவலன், நாட்டாமை, நட்புக்காக இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ் படங்கள் மட்டுமா... தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என வெளி மாநில படங்களும் நூற்றுக்கணக்கில் கோபி பகுதியில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு படப்பிடிப்புக்கு வருபவர்களுக்கு ஆலோசகராக கள்ளிப்பட்டி ஜோதி என்பவரும் உள்ளார். இப்படி சின்ன கோடம்பாக்கமாக செயல்பட்டு வந்த கோபி பகுதியில் தற்போது மருந்துக்கு ஒரு படம் கூட எடுக்கப்படாமல் களை இழந்து போய் உள்ளது.
சினிமா களை தான் இல்லையே தவிர சினிமா படப்பிடிப்பு எடுக்கும் இடங்கள் மேலும் பல களைகளுடன் இயற்கை சூழல் நிறைந்து காணப்படுகிறது என்பது தான் உண்மை.
கோபி பகுதியில் முன்பு போல் ஏன் படப்பிடிப்பு நடத்த வரமாட்டேன்கிறார்கள் என சினிமா ஆர்வலர்களிடம் கேட்டபோது:-
இப்போது படம் எடுப்போர் பெரும்பாலோர் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்கள். ஒரு பாடல் காட்சி எடுக்க கூட அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா என பறந்து விடுகிறார்கள். இங்குள்ள இயற்கை காட்சிகளை ஏனோ அவர்கள் மறந்துவிடுகிறார்கள் என்று கூறினர்.
No comments:
Post a Comment