ஒரு காதலை சொல்வதற்கே நாக்கு தள்ளிப் போகிறது. இதில் பத்து காதல்களை வைத்து படமெடுக்கிறார்கள். அந்த பத்தரைமாற்று தங்கம், திரைப்படக் கல்லூரி மாணவர் ஆர்.வி.பார்த்திபன்.
பத்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் (இவர்கள் அனைவரும் இறுதியாண்டு படிப்பவர்கள்) பத்து முதலாமாண்டு மாணவிகளை காதலிக்கிறார்கள். இதுதான் படத்தின் கதை. இதனை எழுதியிருப்பவரும் ஒரு பொறியியல் கல்லூரி மாணவிதான். பெயர் ஏ.நிர்மலா. படத்தின் வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார்.
படத்துக்கு தேவைப்படும் பத்து ஹீரோக்களையும் சென்னை, தேனி, கோவை என்று வெவ்வேறு ஊர்களிலிருந்து பொறுக்கி எடுத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்களாம். மாணவிகளாக நடிக்க ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.
படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறவர் திரைப்படக் கல்லூரி மாணவர் நிர்மல் ராஜ். ராகவ் என்பவர் இசையமைக்கிறார். தாமரை, நா.முத்துக்குமார், லலிதானந்த் பாடல்கள் எழுதுகின்றனர். படத்துக்கு உன் வருகைக்காக ஆனந்தி என பெயர் வைத்துள்ளனர்.
முன்பு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வித்தியாசமான படங்களை எடுத்தனர். இப்போது ஒன்றுக்கு பத்து காதலை சொல்வதை வித்தியாசம் என நினைக்கின்றனர். ம்... சிலபஸை சேஞ்ச் பண்ணியாகணும்.
No comments:
Post a Comment