ஜெர்மனியின் மூனிச் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா (MIFF) உலகப்புகழ் பெற்றது. இந்த திரைப்பட விழாவில் ஒரு படம் திரையிட தேர்ந்தெடுக்கப்படுவது கவுரவமாக கருதப்படுகிறது.
2009 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விழா இன்று மூனிச்சில் தொடங்குகிறது. இந்த விழாவில் மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனின் ஒரு பெண்ணும் ரெண்டு ஆணும் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.
அடூரின் முந்தைய படமான நாலு பெண்ணுங்கள் படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு பெண்ணும் ரெண்டு ஆணும், நாலு பெண்ணுங்கள் ஆகிய இரண்டுமே மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் தகழி சிவசங்கரமேனனின் கதையை தழுவி எடுக்கப்பட்டவை. ஒரு பெண்ணும் ரெண்டு ஆணும் திரைப்படத்திற்கு கேரள அரசின் ஐந்து விருதுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மூனிச் திரைப்பட விழா இன்று தொடங்கி அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடூரின் படம் மூன்று நாட்கள் திரையிடப்படுகிறது. பல சர்வதேச விருதுகளை குவித்துள்ள அடூர் கோபாலகிருஷ்ணனின் எந்தப் படத்தையும் இந்திய அரசு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்ததில்லை என்பதை இங்கு நினைவுகூர்வது அவசியம்.
No comments:
Post a Comment