Thursday, July 2, 2009

படத்திலிருந்து நீக்கம்...ஹீரோவிடம் மன்னிப்பு கேட்ட நடிகை!

எட்டு லட்சத்தை மொத்தமாக பார்த்தாலே அல்லு சில்லாகி, சில்லு செதிலாகி போய்விடும் அந்த நடிகைக்கு! மெல்ல மெல்ல 40 லட்சம் வரை வளர்ந்திருக்கிறார். அவரிடம் போய் எழுபத்தைந்து லட்சம் தர்றோம். கால்ஷீட் கொடுங்கன்னு கேட்டால், முடியாதுன்னா சொல்வார்? அவசரப்பட்டு கையை நீட்டி அட்வான்சும் வாங்கிவிட்டாராம். ஆனால் இந்த படத்தில் இவர் சோலோ ஹீரோயின் இல்லை. மூவரில் ஒருவர்.

அட்வான்ஸ் வாங்கிய அடுத்த நொடியே இன்னொரு ஹீரோவுக்கு விஷயம் தெரிய, கடும் கோபம் அவருக்கு. வேட்டைக்காரனுக்கு கோபம் வந்தால், முயல்னு தெரியுமா? மானுன்னு புரியுமா? தனது ஐம்பதாவது படத்திலிருந்து அவரை உடனே தூக்குங்கள் என்று கூறிவிட்டாராம். பதறியடித்த நடிகை, நேரடியாக அவர் நடிக்கும் படப்பிடிப்பு ஏரியாவுக்கே போய் விட்டாராம். கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டதாக தகவல்.

அட்வான்சை திருப்பி கொடுத்திட்டு அப்புறம் சொல்லுங்க என்றாராம் ஹீரோ. எனக்கு இவருதான் முக்கியம். பிடிங்க ஒங்க அட்வான்சைன்னு திருப்பி கொடுத்திட்டு வந்திட்டாராம் நடிகை. தமன் ஆடாவிட்டாலும், வுமன் ஆடும்ங்கிற மாதிரி, கையை பிசைந்து கொண்டே கவலைப்படுகிறாராம் தாய்குலம். எழுபத்தைந்து லட்சம் போச்சே என்ற வருத்தம்தான்!

விண்ணை தாண்டி வருவாயா? திடீர் சுணக்கத்தில் சிம்பு

வேக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த விண்ணை தாண்டி வருவாயா படத்தில் திடீர் சுணக்கம். கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ்சை கோயம்பேட்டுக்கு திருப்பிவிட்ட மாதிரி ஒரே அல்லோகலம் என்கிறார்கள். என்னவாம்?

தெலுங்கில் மகேஷ்பாபுவிடம் கால்ஷீட் வாங்கியிருக்கிறார் கவுதம் மேனன். ஆனால் உடனே அல்ல. ஓரிரு மாதங்கள் கழித்துதான் இவரது படத்தில் நடிக்க வருவாராம் பாபுகாரு. விண்ணை தாண்டி வருவாயா கதையைதான் அவரிடமும் சொல்லியிருக்கிறார் கவுதம். தான் நினைத்தமாதிரி தெலுங்கு படம் நகர ஆரம்பித்தால் தமிழ், தெலுங்கு ரிலீசை ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பது கவுதமின் கணக்கு.

ரஹ்மானின் தமிழ் ட்யூனையே தெலுங்குக்கும் பயன்படுத்திக் கொண்டால், ஆடியோ மார்கெட்டிலும் ஒரு அட்டகாச வசூலை பார்க்கலாமே? இப்படி அவர் போட்ட கணக்கில்தான் இந்த சுணக்கம். ஒருவேளை தமிழ் படத்தை முதலில் கொண்டு வந்து அது வேறு மாதிரியான ரிசல்ட்டை கொடுத்தால், மொத்த கதையையும் மாற்ற சொல்வார் மகேஷ்பாபு என்ற அச்சமும் இந்த ஒரே நேர ரிலீஸ் ஐடியாவுக்கு காரணமாம்.

இதற்கெல்லாம் சம்மதிக்க முடியாத சிக்கலில் இருக்கிறார் வி.தா.வ நாயகன் சிம்பு. இரு கெட்டப்புகளில் நடித்திருக்கும் இவர் ஒரு கெட்டப்பில் தாடி வைத்திருக்கிறாராம்! இதற்காக நீட்டலும் மழித்தலும் வேண்டா என்று ஒதுங்கியே இருக்கும் சிம்புவுக்கு தாடியை எடுப்பதா? அல்லது காத்திருப்பதா என்ற சிக்கலும் வந்திருக்கிறது. எது எப்படியோ? போடா போடி வேலையை துவங்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் இப்போது.

வடிவேலு வேண்டாம்! சேரன் பிடிவாதம்.

சேரனின் பெரும்பாலான படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்தான். அப்படியிருக்க, தனியாகவே பொக்கிஷம் என்ற படத்தை இயக்கி வருகிறார் சேரன். மாயக்கண்ணாடி தோல்விக்கு பிறகு ஒரு கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் இவர், ஒவ்வொரு காட்சியையும் மிக உன்னிப்பாக உருவாக்கி வருகிறாராம். நல்ல விஷயம்தான். ஆனால் அதுவே பட்ஜெட்டை பல மடங்கு உயர்த்திவிடும் போலிருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

பொக்கிஷத்தை முதல் காப்பி அடிப்படையில் உருவாக்கி வரும் சேரன், சின்ன சின்ன காட்சிகளுக்காக கூட நாள் கணக்கில் செலவிடுகிறாராம். பட்ஜெட்டை மீறினால் தனது கையிலிருந்துதான் செலவழிக்க வேண்டும் என்பது தெரிந்தும் செலவு செய்வது அவரது நேர்த்திக்கு அடையாளம்! பாராட்டுகள். ஆனால் ஒரு விஷயத்தில் அடம் பிடிப்பதைதான் பொறுக்க முடியாமல் தவிக்கிறாராம் தயாரிப்பாளர்.

கதை கனமாக இருந்தாலும் வடிவேலு மாதிரி யாராவது இருந்தால்தானே ரசிக்க முடியும்? இது தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கின் ஆசை. வைகை புயல் உள்ளே வந்து வேகமாக வீசினால் கதையே சேதாரம் ஆகிவிடும் என்பது சேரனின் சமாதானம். இந்த இழுபறியில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறார்கள். வெற்றிக் கொடி கட்டு போன்ற படங்களில் வடிவேலுவையும் வைத்துக் கொண்டு கதையையும் நேர்த்தியாக சொன்னாரே? அதுபோல இப்போதும் சொல்ல முடியாதா என்ன? ஞாயமாதான் இருக்கு!

நான் கடவுள் விவகாரம்: பாலாவுக்கு நோட்டீஸ்!

நான் கடவுள் படத்தில் ஊனமுற்றோரை பாலா இழிவுபடுத்திவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இயக்குநர் பாலாவுக்கு சென்னை மாநகர சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் என்ற படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப் படத்தில் நடிகர் ஆர்யா, நடிகை பூஜா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் ஊனமுற்றோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஏராளமான ஊனமுற்றோர் இப்படத்தில் இதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக ஊனமுற்றோர் சங்கத்தின் சார்பில் சென்னை மாநகர சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஊன முற்றோரை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. இயக்குநர் பாலா தரப்பில் வக்கீல்கள் ஆஜராவதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து வருகிற ஆகஸ்டு 3-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி பாலாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாக்சன் உடல் அடக்கம் நெவர்லேன்டில் கிடையாது - ரசிகர்கள் ஏமாற்றம்

லாஸ் ஏஞ்சலெஸ்: மைக்கேல் ஜாக்சனின் உடல் அவரது பண்ணையான நெவர்லேன்டில் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது இன்னும் முடிவாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குவிந்துள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஜாக்சன் மரணம் குறித்த சர்ச்சையால் அவரது உடலை ரசிகர்கள் பார்வைக்கு வைப்பது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் நாளை ஜாக்சனின் உடல் அவரது பண்ணையான நெவர்லேன்டில் பார்வைக்கு வைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

ஏற்கனவே இதை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெவர்லேன்டில் குவிந்துள்ளனர். நாளை ஜாக்சனின் உடலை கடைசி முறையாக தரிசித்து விட வேண்டும் என ஆர்வத்துடன் உள்ளனர்.

ஆனால் இப்போது திடீரென அந்தத் திட்டம் ரத்தாகி விட்டதாம். இதுகுறித்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்னர்.

உடல் அடக்கம் குறித்து ஜாக்சன் குடும்ப செய்தித் தொடர்பாளர் கென் சன்ஷைன் கூறுகையில், வெள்ளிக்கிழமை வரை நெவர்லேன்டில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் இல்லை, அப்படி ஒரு திட்டமும் இதுவரை இல்லை என்றார்.

இதற்கிடையே, லாஸ் ஏஞ்சலஸிலேயே ஜாக்சனின் உடல் அடக்கம் நடைபெறும் எனவும் ஒரு தகவல் கூறுகிறது.

நெவர்லேன்ட் எஸ்டேட்டுக்கு ஜாக்சன் மட்டும் உரிமையாளர் இல்லை. தாமஸ் பாரக் என்ற கோடீஸ்வரரும் இதில் பங்குதாரர் ஆவார். எனவ அவரிடம் ஜாக்சன் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாம். இருப்பினும் இதுதொடர்பாக சிக்கல் நிலவுவதால்தான் அங்கு உடல் அடக்கம் நடைபெறாது எனக் கூறப்படுகிறது.

ஜாக்சன் வீட்டில் சக்தி வாய்ந்த மருந்து கண்டுபிடிப்பு..

இதற்கிடையே, அறுவைச் சிகிச்சை போன்ற சமயங்களில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த மயக்க மரு்நது ஒன்று ஜாக்சன் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டால் உயிருக்கே உலை வைத்து விடுமாம்.

அந்த மருந்தின் பெயர் புரபோபால். அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இந்த மருந்து நோயாளிகளுக்கு அளிக்கப்படுவது வழக்கம். ஆனாலும் அளவு அதிகமாகி விட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

இந்த மருந்து ஜாக்சன் வீட்டில் இருந்ததாக ஒரு இணையதளம் தெரிவித்துள்ளது. இது எப்படி ஜாக்சன் வீட்டுக்கு வந்தது. இதை ஜாக்சன் பயன்படுத்தி வந்தாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இன்று முதல் ஞாபகங்கள்!

கவிஞர் பா. விஜய் தயாரித்து, நடித்துள்ள முதல் படமான ஞாபகங்கள் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.எல்லோரையும் போல ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை பா.விஜய்யையும் தொற்றிக் கொள்ள அவரும் ஹீரோவாகி விட்டார்.

ஞாபகங்கள் என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தை அவரே சொந்தமாக தயாரித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராமகிருஷ்ணா பட நாயகி ஸ்ரீதேவிகா நடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

ஜீவன் இயக்கியுள்ள இப்படத்தின் கதை, பா.விஜய்யின் நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவமாம்.

இதுகுறித்து விஜய் கூறஉகையில், எனது நெருங்கிய நண்பர் ஒருவர் பெண் மீது காதல் கொ்டார். ஆனால் அந்தக் காதல் நீடிக்கவில்லை. அப்பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் கல்யாணமாகி விட்டது.

உடைந்த மனதுடன் சொந்த ஊருக்கு வந்தார் எனது நண்பர். கடைசியில் இறந்தும் போனார். இதை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியு்ளோம் என்றார்.

இப்படத்தில் ஸ்ரீதேவிகா சொந்தக் குரலில் பேசியுள்ளாராம். சினிமாவில் அவர் சொந்தக் குரலில் பேசி நடித்திருப்பது இதுவே முதல் முறையாம

இப்போதைக்கு திருமணம் இல்லை-அம்ரிதா

பாலிவுட் கனவுக் கன்னிகளில் ஒருவரான அம்ரிதா ராவ் இப்போதைக்கு கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பத்து வருடங்களுக்கு அதுகுறித்து சிந்திக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

முதலில் ஷாஹித் கபூருடன் இணைத்துப் பேசப்பட்டார். பின்னர் ஹர்மான் பவேஜாவுடன் (இவர் முன்பு பிரியங்காவுடன் படு குளோசாக இருந்தவர்) இணைத்துப் பேசப்பட்டார்.

இதையெல்லாம் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய் விட்டதாக அலுத்துக் கொள்கிறார் அம்ரிதா.

ஏன் அப்படி என்றால், என்னுடைய மனதில் இப்போதைக்கு யாரும் ஸ்பெஷலாக குடியேறவில்லை. அதெல்லாம் 10 வருடங்களுக்குப் பிறகுதான். அதுவரை கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்போதைக்கு சினிமாவில் தான் எனது முழுக் கவனமும் இருப்பதாக கூறுகிறார் அம்ரிதா.

ஷாருக்கானுடன் மெய்ன் ஹூ னா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் தற்போது ஷார்ட் குட் என்ற படத்தில் அக்ஷயி கண்ணா, அர்ஷத் வர்சி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் அம்ரிதா.

மீண்டும் அண்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி

ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இதுவும் தெலுங்கு ‌‌ரீமேக் என்பதை சொல்லத் தேவையில்லை.

தெலுங்கில் ரவிதேஜா, ஷாம், இலியானா நடித்த படம் கிக். அங்கு படம் பம்பர் ஹிட். கிக்கின் தமிழ் ‌‌ரீமேக் உ‌ரிமையை வாங்க பலரும் போட்டி போட்டனர். இறுதியில் வெற்றி பெற்றவர் எடிட்டர் மோகன்.

ராஜா ‌‌கிக்கின் தமிழ் ‌ரீமேக்கை இயக்குகிறார். இவர் இயக்கும் ஐந்தாவது ‌ரீமேக் படம் இது. இந்த ஐந்திலும் அவரது தம்பி ரவி நடித்திருப்பது இன்னொரு சாதனை.

படத்தில் ஜெயம் ரவியுடன் வடிவேலு நடிக்கி

ரம்யா நம்பீஸனின் மகிழ்ச்சி

மலையாளத்திலிருந்து கலைச் சேவைக்கு வரும் நடிகைகளில் இருவகை உண்டு. எத்தனை கோடி தந்தாலும் கிளாமராக மட்டும் நடிக்க மாட்டேன் என்று சொல்லும் நவ்யா நாயர் வகையினர் ஒன்று. கோடிகளை சம்பாதிக்க எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற நயன்தாரா வகையினர் இரண்டாவது. ரம்யா நம்பீஸன் முதல் வகை.

ஜெகன்‌ஜியின் ராமன் தேடிய சீதை ரம்யாவுக்கு தமிழில் முதல் படம். படம் நெடுக பிழிய பிழிய அழ வைத்ததில் ரம்யா நம்பீஸனின் அழகு கோடம்பாக்கத்துக்கு தெ‌ரியாமல் போய்விட்டது. அதையும் மீறி கிடைத்த ஒரே வாய்ப்பு ஆட்டநாயகன்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயா‌ரிக்கும் ஆட்டநாயகனில் ஷக்தி ஹீரோ. படப்பிடிப்பு பல மாதங்கள் முன்பே தொடங்கியது. பைனான்ஸ் பிரச்சனை... படம் இன்னும் முடியாமல் நொண்டியடிக்கிறது. நினைத்தாலே இனிக்கும், வஞ்சிக்கோட்டை வாலிபன் என ஷக்தி தடதடவென மற்ற படங்களில் பிஸியாக, பாவம் ரம்யா நம்பீஸன். ஆட்டநாயகன் வந்தால்தான் அடுத்த வாய்ப்பே என்ற நிலை.

தற்போது பைனான்ஸ் பிரச்சனையிலிருந்து மீண்டிருக்கும் லட்சுமி மூவி மேக்கர்ஸ் மீண்டும் படத்தை தொடங்கும் வேலையை முடுக்கிவிட்டுள்ளது. ரம்யா நம்பீஸனை பொறுத்தவரை இதைவிட நல்ல சேதி இருக்க முடியாது. எப்போது அ‌ரிதாரம் பூசலாம் என்று ஆவலுடன் காத்திருக்கிறார். பெண் பாவம் பொல்லாதது. சீக்கிரம் படப்பிடிப்பை தொடங்குங்கள்.

நகரத்துக்கு திரும்பும் சசிகுமார்


தமிழ் சினிமாவின் லகான் இப்போது சசிகுமார் கையில். அடுத்து எந்த ஹீரோவின் படம் ‌ ரிலீஸாகிறது என்று எதிர்பார்த்திருந்த காலம் போய், எந்த இயக்குன‌ரின் படம் வெளியாகிறது என்று ரசிகர்கள் ஆர்வமாக கேட்கும் காலம் வந்திருக்கிறது. சுப்பிரமணியபுரம், பசங்க, நாடோடிகள் என சசிகுமா‌ரின் பங்களிப்பில் வந்த படங்கள் உருவாக்கிய மாற்றம் இது.

இயக்குனர், தயா‌ரிப்பாளர், நடிகர் என காலடி பதித்த மூன்று துறைகளிலும் சசிகுமாருக்கு வெற்றி. அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பதே இப்போதைய கேள்வி.

ஏற்கனவே கூறியது போல் முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படத்தை எடுக்கயிருக்கிறார் சசிகுமார். படத்தை இந்திப்பட நிறுவனம் தயா‌ரிக்கிறது. சசிகுமார் பங்களிப்பு செலுத்திய மூன்று படங்களுமே கிராமத்துப் பின்னணியில் தயாரானவை. இந்த புதிய படம் நகரத்து பின்னணியில் தயாராகவுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் சசிகுமார் நடிக்கிறார். ஹீரோக்களை நம்பாமல் ஸ்கி‌ரிப்டை நம்பும் இந்த இயக்குனர்கள, தமிழ் சினிமாவில் புது வெளிச்சம் பாய்ச்சுவதை யாரும் மறுப்பதற்கில்லை.

வால்மீகி விமர்சனம்


கெட்டவனை திருத்தும் ஹீரோயின். தமிழ் சினிமா பலமுறை அடித்து துவைத்து காயப் போட்ட கதை. அறிமுக இயக்குனர் அனந்த நாராயணன் கதையை சொல்ல எடுத்துக் கொண்டிருக்கும் களம் தமிழுக்கு புதுசு.

அழுக்கான மனிதர்கள், குப்பையும் கூளமும் நிறைந்த குறுகலான தெருக்கள், மனிதன் வசிக்கவே முடியாத சே‌ரி குடியிருப்புகள், கைவிடப்பட்ட கல்லறைத் தோட்டம்... தமிழ் சினிமா தனது கேமரா கண்களிலிருந்து மறைக்க விரும்பும் சென்னையின் அசலான முகத்தை அதன் அழுக்கோடும், அழகோடும் அள்ளி வந்திருக்கிறது அழகப்பனின் கேமரா.


பிக்பாக்கெட்டாக வரும் அகில் தனது கேரக்டருக்காக நிறைய உழைத்திருக்கிறார். சென்னை தமிழில் இன்னும் சிரத்தை கூடியிருந்தால் அவரது அழுக்கு கேரக்டருக்கு மேலும் அழகு சேர்ந்திருக்கும்.

மீரா நந்தன் கிண்டர் கார்டன் டீச்சர். பைத்தியத்திடம் சிக்கிக் கொள்ளும்; அவரை அகில் காப்பாற்ற, அகில் மீது பைத்தியமாகிறார் மீரா. அவருக்கொரு கொடுமையான பிளாஷ்பேக்.

அகில் திருந்துவதற்காக இயக்குனர் வைத்திருக்கும் காட்சி, நமது கட்டுப்பட்டை மீறி கண்ணீரை துளிர்க்க வைக்கிறது. பாலியல் தொழிலாளியாக மாறிய பெண், என்னை ம‌ரியாதையா அடக்கம் பண்ணுவியா என கேட்பது பொட்டில் அறையும் வசனம்.

பூக்கா‌ரியாக வரும் தேவிகா அகிலிடம் தனது திருமணத்தின் போது அடுக்கும் நீள வசனத்தை தன்னம்பிக்கை நூலில் சேர்க்கலாம். அவரது ஆடம்பர திருமணம் இயக்குனர் கோட்டைவிட்ட இடங்களில் ஒன்று.

அஜயன் பாலா‌விடம் சே‌ரி பாஷை அருவியாக கொட்டுகிறது. அவரது சகோத‌ரி பாசம் சென்டிமெண்ட் குறையை போக்குகிறது. ஆண்களிடம் மட்டுமே பழகும் பெண் நல்ல கற்பனை.

ஒவ்வொரு திருட்டின் பின்னணியிலும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் இருக்கிறது என்ற கருத்தை வால்மீகியில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த காட்சிகள் பலவற்றில் நாடகத்தனம்.

என்னடா பாண்டி பாடலை தவிர மற்றவை இளையராஜாவா இசை என்று கேட்க வைக்கின்றன. பின்னணி இசையில் மட்டுமே ராஜா தெ‌ரிகிறார்.

படத்தின் கதைக் களத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருப்பது படத்தின் மிகப் பெ‌ரிய பலம். பலவீனம் நிறைய. அகில் ஒரு பிக்பாக்கெட் என்பதை மீரா தெ‌ரிந்து கொள்ள வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அந்த அணிவகுப்பு, மீராவின் பிளாஷ்பேக், அவரது திடீர் மரணம்...

அ‌ரிதாரம் பூசாத கதாபாத்திரங்களுக்காகவும், வழக்கமான குத்துப் பாடல்களை தவிர்த்ததற்காகவும் வால்மீகியை ஒருமுறை பார்க்கலாம்.

ரன்பீருடனான உறவை பகிரங்கப்படுத்தியதற்காக வருந்துகிறேன் - தீபிகா

நடிகர் ரன்பீர் கபூருக்கும், எனக்குமான உறவை வெளிப்படையாக சொல்லியதற்காக வருத்தப்படுகிறேன். அவசரப்பட்டிருக்கக் கூடாது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் பாலிவுட் 'பாய்லிங் ஸ்டார்' தீபிகா படுகோன்.

சமீபத்தில் ரன்பீருக்கும், தனக்குமான நெருக்கத்தை சற்று வெளிப்படையாக கூறியிருந்தார் தீபிகா. ஆனால் இப்படிச் சொன்னதற்காக வருத்தப்படுவதாக இப்போது கூறியுள்ளார்.

இதுகுறித்து தீபிகா கூறுகையில், நாங்கள் இருவரும் காதல் கொண்டபோது வெளிப்படையாக அது இருக்க வேண்டும் என இருவருமே முடிவு செய்து கொண்டோம். இல்லாவிட்டால் அங்கு கிஸ் அடித்தோம், இங்கு கட்டிப்பிடித்துக் கொண்டோம் என்றெல்லாம் தேவையில்லாமல் செய்திகள் வரும் என்பதால்.

எங்கள் இருவருக்கும் இடையிலான உறவு தெளிவாக உள்ளதால், மறைப்பதற்கு எதுவும் இல்லை. அதை மக்கள் மதிப்பார்கள் என நம்பினேன். ஆனால் நானும், ரன்பீரும் சேர்ந்து இருப்பது போன்ற சில புகைப்படங்களை பத்திரிக்கைகள் சில வெளியிட்டது எனக்கு வேதனை தருகிறது.

எங்கள் இருவரது குடும்பங்களும் மிகவும் கெளரவமானவை. இதுபோன்ற புகைப்படங்களால் இரு தரப்பு குடும்பங்களும் வேதனைப்படும்.

இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொண்டேன். இனிமேல் வெளிப்படையாக இருக்கக் கூடாது. எங்களது உறவை வெளிப்படையாக சொன்னது தப்பாகி விட்டது. அதற்காக வருந்துகிறேன் என்றார் தீபிகா.

தீபிகாவும், ரன்பீரும் இணைந்து நடிக்க நிறைய பட வாய்ப்புள் வருகிறதாம். இருப்பினும் தங்களுக்கேற்ற கதைக்காக இருவரும் காத்திருக்கிறார்களாம்.

உறவு வேறு, சினிமா வேறு என்பதில் இருவருமே தெளிவாக இருக்கிறார்களாம்.

புரளியால் எனது காதல் தடம் புரண்டு போய் விட்டது - ஷாயாலி புலம்பல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை நான் காதலிப்பதாக வெளியான புரளிச் செய்தியால் எனது உண்மையான காதல் முறிந்து போய் விட்டது என்று புலம்பித் தவிக்கிறார் ஷாயாலி பகத்.

இந்திக்காரப் பொண்ணான ஷாயாலி தமிழிலும் முகம் காட்டியவர்தான். நியூட்டனின் 3ம் விதி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு போடி போட்டவர் ஷாயாலி.

இப்போது பெரும் புலம்பாலியாக மாறியுள்ளார் ஷாயாலி. ஏனாம்..

பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை நான் விழுந்து விழுந்து காதலிப்பதாக பத்திரிகைகளில் எழுதித் தள்ளி விட்டார். ஆனால் இப்போது அவரை பிரிந்தும் விட்டதாக இன்னொரு கதையைக் கிளப்பி விட்டுள்ளனர்.

உண்மையில் எங்களுக்குள் காதலே கிடையாது. பிறகு எங்கே பிரிவது..

நானும், சோயிப்பும் ஓரிரு முறை காபி சாப்பிடப் போயுள்ளோம். அவ்வளவுதான். மற்றபடி இருவரும் பெரிய அளவில் சந்திக்கவே இல்லை.

இதில் கொடுமை என்னவென்றால், நான் உண்மையில் வேறு ஒருவரைக் காதலித்தேன். மாலிக்குடன் காதல் என்ற செய்தியால் எனது உண்மையான காதலர் பிரிந்து போய் விட்டார்.

ஏன்தான் இப்படி புரளி மேல் புரளியைக் கிளப்பி இப்படி வயிற்றெரிச்சலைக் கிளப்பிக் கொள்கிறார்களோ என்று புலம்புகிறார் ஷாயாலி..

ஷாயாலி புலம்பல் ரொம்ப நியாயமாவுல்ல இருக்கு..

பாலசந்தர் பாராட்டு... சமுத்திரக்கனி சந்தோஷம்!


வாத்தியாரே முதுகில் தட்டி “வெரிகுட்”னு சொல்றதுதான் மாணவனுக்கு அழகு! அந்த வெரிகுட் பாராட்டை பல வருஷம் கழிச்சு வாங்கியிருக்காரு சமுத்திரக்கனி. நாடோடிகள் படத்தை தனது குருநாதர் பாலசந்தருக்கு போட்டு காட்டினாராம். படத்தின் இடைவேளையின் போது சமுத்திரக்கனி கையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட பாலசந்தர், வார்த்தைகள் வாரமல் தவித்துப் போனாராம். படம் முடிந்து வெளியே செல்லும்போது தன் மாணவனின் கையை பிடித்துக் கொண்டு காருக்குள் இழுத்துச் சென்றவர், மிகவும் நெகிழ்ச்சியோடு சொன்னாராம் இப்படி. “எங்கே... உன்னோட திறமையெல்லாம் வெளியே தெரியாமலே போயிடுமோன்னு பயந்திட்டு இருந்தேன். இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்” என்றாராம்.

இதைவிட வேறென்ன பாராட்டுகள் வேணும்? சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் தவிக்கிறார் சமுத்திரக்கனி. சற்றே நீளமான படம் என்பதால் பட பிரதிகளோடு ஒரு கடிதத்தையும் வைத்து அனுப்பினாராம் தியேட்டர் ஆபரேட்டர்களுக்கு. இரண்டாம் பகுதி மட்டும் இரண்டரை மணி நேரம் இருந்தது. அதை மெல்ல மெல்ல அதே நேரத்தில் மிக கவனமாக குறைத்திருக்கிறேன். உங்கள் பங்குக்கு குறைக்கிறேன் என்று நீங்களும் கையை வைத்துவிடாதீர்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாராம்.

சமுத்திரக்கனியின் கடிதத்திற்கு அப்படியே மதிப்பளித்திருக்கிறார்கள் ஆபரேட்டர்களும். ஆனால், படம் போகிற வேகத்தில் இந்த நீளம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்கிறது ரசிகர்கள் வட்டாரம்!

அசின்-நயன்தாரா... அப்பா, அம்மா இம்சைகள்!


ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய சம்பவங்கள். எப்பவும் அசினோடு ஒட்டிக் கொண்டே திரியும் அவரோட அப்பாவான மிஸ்டர் தோட்டம் கல், இப்போது தோட்டத்திலே கல்லு பொறுக்குகிற வேலைக்காவது போகலாமான்னு யோசிக்கிற அளவுக்கு சும்மாதான் இருக்காரு. ஏன்? இந்தி வாலாக்களுக்கு அசினை பிடிச்ச அளவுக்கு அவங்க அப்பாவை பிடிக்கலே! அவரு எதுக்கு எப்பவுமே உங்க கூட வர்றாரு. செக்யூரிடியான்னு கேட்கிற அளவுக்கு கிண்டல்! வேற வழியில்லாம “என் வேலைய நான் பார்க்கிறேன். நீங்க எதுக்கு?” என்று கூறிவிட்டாராம் அசின்.

இன்னொரு சம்பவம்?

எப்பவுமே பெண்ணை தனியாகவே அனுப்பி பழகிய நயன்தாராவின் பெற்றோர்கள், தங்கள் முடிவை மாற்றிக் கொண்டதுதான். எந்த பத்திரிகையை திருப்பினாலும், நயன்தாரா பற்றிய தப்பு தப்பான செய்திகள். காதல், கத்தரிக்காய் என்று கூடை கூடையாக கெட்ட பேர். வேறு வழியில்லாமல் இனி எங்கு போனாலும் நாங்களும் வர்றோம் என்று கூறிவிட்டார்களாம்.

எதுக்கு உங்களுக்கு சிரமம்னு பொண்ணு சண்டை போட்டாலும் விடாப்பிடியா அவங்க வர்றது நயன்தாராவுக்கும் பிடிக்கலே. இவரை வச்சு படம் எடுக்கிறவங்களுக்கும் பிடிக்கலே. ஃபிளைட் பயணத்திலே ஆரம்பிச்சு, போர்ட்டிங், லாட்ஜிங்குன்னு பில்லு மும்மடங்காக ஆனதுதான் இந்த பிடிக்கலேவுக்கு காரணாமாம்.

கால்கட்டு போட்டா சினிமா கைவிட்டு போயிரும். கால் கட்டு போடலேன்னா பொண்ணே கைவிட்டு போயிரும். எதை செய்யுறதுன்னு ஒரே குழப்பமாம் அவங்க அப்பா அம்மாவுக்கு!

தலைகீழாக தொங்கும் த்ரிஷா! படத்தில் வருமா பங்கி ஜம்ப்?


குஷி படத்தில் தலைகீழாக தொங்கி குலை நடுங்க வைப்பாரே விஜய்? அந்த ஆட்டத்திற்கு பங்கி ஜம்ப் என்று பெயர். முன்பெல்லாம் இந்த ஆட்டத்தை பார்க்கவோ, விளையாடவோ வெளிநாட்டுக்கு போக வேண்டும். இப்போது மிக சுலபம். நம்ம ஊருக்கே வந்து விட்டது பங்கி ஜம்ப். (யாரோ ஒரு கட்சித் தாவல் பார்ட்டி கண்டு பிடிச்ச விளையாட்டா இருக்குமோ?)

இந்த ஆட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இப்படி வெளவால் மாதிரி தலைகீழாக தொங்கி பீதியை கிளப்பினாலும், அவரை பொருத்தவரை இது தைரியத்தை வளர்க்கிற விளையாட்டு. குஷி மாதிரி யாராவது ஒரு படம் எடுத்து இப்படி தொங்க சொன்னாலும், சம்மதிக்கிற மூடில்தான் இருக்கிறாராம் த்ரிஷ்.

இதற்கிடையில் இந்தியை வாழ வைப்பதற்காக, தமிழ் படங்களை தண்டவாளத்தில் தள்ளுகிற வேலையில் இறங்கியிருக்கிறார் கனவு தேவதை! (இப்படிதான் சொல்லுகிறார்கள் அவரது ரசிகர் மன்றத்தினர்) தமிழில் இவர் நடித்து வந்த ஆடுகளம் படத்தில் இதுவரை 12 நாட்கள் நடித்திருக்கிறாராம். இந்தியில் நடிக்க இடைஞ்சலாக இருக்கிறது என்பதற்காக இந்த படத்திலிருந்து விலகிக் கொண்டாராம். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திலிருந்து அவர் விலகினாலும், சுள்ளானுடன் எவ்வித பிரச்சனையும் இல்லை என்கிறது த்ரிஷா வட்டாரம்.

அடி ஆத்தாடி... இது பாணா காத்தாடி!


அடி ஆத்தாடின்னு வளர்ந்து நிக்கிறாரு அதர்வா. இவரை பொறுத்தமான படத்திலே நடிக்க வைக்கணும்னு காத்திருந்த முரளிக்கு, கிடைச்சதுதான் பாணா காத்தாடி! தமிழ்சினிமாவில் வயசே ஆகாத சில ஹீரோக்கள் வரிசையில் முரளிக்கு முதலிடம் கொடுக்கலாம். அவரு வீட்டிலேர்ந்து ஒரு வாரிசு வந்தால், குலவை போட்டு கொண்டாடலாமே?

முன்னணி நிறுவனம் ஒன்று நாங்களே உங்க வாரிசை அறிமுகப்படுத்துறோம் என்று முன் வந்தது. சந்தோஷமாக சம்மதித்த முரளிக்கு, அப்படம் வளராமல் போனதில் வருத்தம்தான். ஆனாலும், பாராம்பரிய நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அதர்வாவை ஹீரோவாக்க முன் வந்த போது முன்பை விட சந்தோஷம் முரளிக்கு.

இப்போதும், நமக்கு தெரியாத காத்தாடி கலவரங்கள் நடந்து வருகிறது சென்னையில். பந்தயம், பரபரப்பு என்று அங்கே நடக்கும் நிலவரங்களை அவதானித்து, புதிய கதை ஒன்றை உருவாக்கியிருக்கிறார் பாணா காத்தாடி படத்தின் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. இவர் மாஸ்கோவின் காவேரி, பூக்கடை ரவி படத்தின் கதாநாயகி. காத்தாடி சம்பந்தமான கதை என்பதால், குஜராத்தில் நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் போட்டிக்கு சென்று படமாக்கப் போகிறார்களாம்.

முக்கியமான விஷயம் இன்னொன்று. இப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் பிரசன்னா. இவருக்கு நல்ல நடிகர் என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அஞ்சாதே. இந்த படத்தில் கிடைத்த பெயரை, பாணா காத்தாடி மூலம் மீண்டும் அடைவார் என்கிறது சினிமா வட்டாரம்.

கல்யாணப் பத்திரிக்கையை வைத்து திருப்பதி கோவிலில் வழிபட்டார் மீனா


திருமணத்தையொட்டி தனது கல்யாணப் பத்திரிக்கையுடன் திருப்பதி சென்ற நடிகை மீனா அங்கு சாமி முன்பு பத்திரிக்கையை வைத்து பயபக்தியுடன் வழிபட்டார்.

நடிகை மீனாவுக்கு ஜூலை 12ம் தேதி திருப்பதியில் திருமணமாகவுள்ளது. மாப்பிள்ளை வித்யாசாகர் பெங்களூர்க்காரர்.

திருமணத்தையடுத்து சென்னையில் ஜூலை 14ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்யாணம் நிச்சயமானதும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்தே வந்து தரிசனம் செய்வதாக வேண்டியிருந்தாராம் மீனா. அதன்படி தனது கல்யாணப் பத்திரிக்கையுடன் அவர் திருப்பதி சென்றார்.

தந்தை துரைராஜ், தாயார் மல்லிகாவுடன் திருப்பதி சென்ற அவர் கீழ் திருப்பதியிலிருந்து படிகள் வழியாக சுமார் 3 மணி நேரம் நடந்து திருமலையை அடைந்தார்.

அங்கு ஏழுமலையான் பாதத்தி்ல கல்யாணப் பத்திரி்க்கையை வைத்து பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் பிரசாதத்தை பெற்றுக் கொண்டார்.

பின்னர் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் சிக்கிக் கொண்டார் மீனா. அவர்களிடம் அவர் பேசுகையில், திருமணமானாலும் தொடர்ந்து நடிப்பேன். டிவி தொடர்களிலும், நல்ல கேரக்டர்கள் கொண்ட படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்றார் மீனா.

ஜாக்சன் தாயாரிடம் குழந்தைகள்-தற்காலிக ஒப்படைப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: மறைந்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகள் ஜாக்சனின் தாயார் காத்ரினிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் சமீபத்தில் மறைந்தார். அவரது மறைவில் பல சந்தேகங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து அவரது மூன்று குழந்தைகளான பிரின்ஸ் மைக்கேல் (12), பாரிஸ் மைக்கேல் (11) மற்றும் பிரின்ஸ் மைக்கேல் (7) ஆகியோரை யாரின் பராமரிப்பில் வளர்ப்பது என்ற கேள்வியும் எழுந்தது.

இதையடுத்து ஜாக்சனின் குடும்ப வக்கீல் குழந்தைகள் ஜாக்சனின் தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

அப்போது, ஜாக்சனின் மறைவுக்கு பின் அந்த குழந்தைகளை பாதுகாத்து வரும் ஜாக்சனின் தாயார் காத்ரின் ஜாக்சனிடம் அவர்களை தற்காலிகமாக ஒப்படைக்க உத்தரவிடுவதாக நீதிபதி மிட்செல் பெக்லாப் தீர்ப்பளித்தார்.

அதேபோல், ஜாக்சனின் சொத்துக்களுக்கும் அவரது தாயாரை பாதுகாவலராக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்த மைக்கேல் ஜாக்சனின் குடும்ப செய்தி தொடர்பாளரான வக்கீல் லான்டெல் மெக்மிலன் கூறுகையில்,

முதல் இரண்டு குழந்தைகளுக்கு தாயான மைக்கேல் ஜாக்சனின் இரண்டாவது மனைவியான டெபோரா ரோ இதுவரை குழந்தைகளை கேட்கவில்லை. இந்த குழந்தைகளை அவரிடம் ஒப்படைத்தால் அவர்களுக்கு தீங்கு விளையலாம்.

அந்த குழந்தைகள் தங்களது பாட்டியிடம் இருப்பது அவர்களுக்கு நல்லது. ஜாக்சனின் தாயார் மற்ற குழந்தைகளிடமே அன்புடன் இருக்க கூடியவர். தனது பேரக் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்வார் என்றார்.

இன்று உயில் பிரிக்கப்படும்...

ஜாக்சனின் மானேஜர் பிராங் டி லியோ கூறுகையில், ஜாக்சனின் உயில் இன்று பிரித்து பார்க்கப்படும். அதில் அவரது விருப்பங்களும், குழந்தைகள், தாயார் ஆகியோருக்கு அவர் ஒதுக்கியிருக்கும் பணம். தனது மறைவுக்கு பின் தனது குழந்தைகள் யாருடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளிட்டவை தெரிய வரும்.

ஜாக்சன் தனது தாய் மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரது குழந்தைகள் தொடர்ந்து அவரிடம் இருப்பது தான் நல்லது என்றார். ஆனால், அந்த உயில் எப்போது தயாரிக்கப்பட்டது என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் முதல் இரண்டு குழந்தைகளும்ஜாக்சனுக்கு பிறக்கவில்லை என கூறிய ஜாக்சனின் இரண்டாவது மனைவி டெபோரா ரோவின் வக்கீல் கூறுகையில்,

தற்போது டெபோரா, ஜாக்சனின் மறைவினால் அந்த குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தான் அதிகம் சிந்தித்து வருகிறார். அந்த குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நல்லபடியாக இருக்க வேண்டும், ஜாக்சனின் ஆத்ம சாந்தி அடைய வேண்டும் என அவர் விரும்புகிறார்.

உடல் அடக்கம் தாமதமாகும்-தந்தை...

மைக்கேல் ஜாக்சன் மரணத்தில் சந்தேகம் எழுந்ததை அடுத்து அவரது குடும்பத்தார் அவரது உடலுக்கு இரண்டாவது முறையாக் பிரேத்யேக டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர்.

இதன் அறிக்கை வந்த பின்னர் தான் அவரது உடல் அடக்கம் செயயப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த அறிக்கை கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அவரது உடல் அடக்கமும் தள்ளி வைக்கப்படுவதாக தெரிகிறது.

இது குறித்து ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் கூறுகையில்,

ஜாக்சன் உடல் எப்போது அடக்கம் செய்யப்படும் என தற்போது கூற முடியாது. இன்னும் சில நாட்கள் ஆகலாம். இறுதி சடங்கு தொடர்பாக இதுவரை எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றார்.

விசாரணைக்கே வராததால் மோகினி தொடர்ந்த விவாகரத்து மனு தள்ளுபடி


நடிகை மோகினியும், அவரது கணவரும் தொடர்ந்து விவாகரத்து வழக்கு விசாரணைக்கு இருவரும் தொடர்ந்து வராமல் இருந்தாதல் வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

மகாலட்சுமி என்ற இயற் பெயர் கொண்ட மோகினி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் பரத். இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.இருவருக்கும் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவிக்கு இடையே பூசல் ஏற்பட்டது. பிரிந்தனர். விவாகரத்து செய்யவும் முடிவு செய்தனர்.

அதன் படி இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதன் பின்னர் இருவரும் சில விசாரணைகளுக்கு வந்து சென்றனர். ஆனால் அதன் பின்னர் இருவருமே வரவில்லை. தொடர்ந்து நான்கு முறையாக அவர்கள் இருவரும் வராததால் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்து விட்டது.

கதையில் சிவா‌ஜி பாடல்கள் ரீமிகஸ்

ரீமிகஸ் என்ற பெய‌ரில் பழைய பாடல்களை கொத்துப் பரோட்டா போடுகிறார்கள் கோடம்பாக்கத்தில். தட்டிக் கேட்டும் இந்த அநியாயத்துக்கு யாரும் தடை போடுவதாக இல்லை.

இந்நிலையில் கதை படத்தைப் பற்றி காதில் விழுந்த சேதி பழையப் பாடல்களை ரசிப்பவர்களுக்கு காதில் தேன் வந்து பாயும் தித்திப்பை கொடுத்திருக்கிறது.

மோகமுள் அபிஷேக் இயக்கும் கதையில் ஷான், நிவேதிதா, அபிநய் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். டீன்ஏ‌ஜ் கதை. பால் ஜேக்கப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் சிவா‌ஜி கணேசனின் புகழ் பெற்ற மூன்று பாடல்களை பயன்படுத்துகிறார்கள். ஒன்று, ஆஹா மெல்ல நட... இரண்டாவது, உன்னை ஒன்று கேட்பேன்... மூன்றாவது, கொடி அசைந்ததும் காற்று வந்ததா...

இந்த மூன்று பாடல்களையும் ‌‌ரீமிக்ஸ் என்ற பெய‌ரில் மிதித்து நசுக்காமல் அப்படியே அந்த பழைய டியூனிலேயே பயன்படுத்துகிறார்கள். டீன்ஏ‌ஜ் கதையில் மூன்று பழைய பாடல்களை டியூனைக் கூட மாற்றாமல் பயன்படுத்துவதற்கு தனியாக பாராட்டு கூட்டமே நடத்தலாம் இசையமைப்பாளர் பால் ஜேக்கப்புக்கும், இயக்குனர் அபிஜேக்குக்கும்.

கவுண்டமணியின் கவுண்டவுன்

கவுண்டமணியின் அடுத்த கவுண்டவுன் தொடங்கிவிட்டது. இன்னும் மூன்றே நாள்... வனவாசத்தை முடித்து திரையில் புதுவசந்தத்தை கொண்டாடப் போகிறார் கவுண்டர்.

சிலரது திரைவாழ்க்கை முதல் இன்னிங்ஸோடு முடிந்துவிடும். சிலருக்கு இரண்டாவது. மூன்றாவது வரை தாக்குப் பிடித்தவர் யாருமில்லை. ஆனால், கவுண்டமணி...?

படங்களே இல்லாமல் இதுவரை ஐந்து முறையாவது பீல்டு அவுட் ஆகியிருப்பார் கவுண்டமணி. ஆனால் ஒவ்வொருமுறையும் பீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டு வந்திருப்பது ஆச்ச‌ரியம். மீடியாவின் துணை இல்லாமலே இந்த சாதனையை நிகழ்த்தி‌க் காட்டியவர் அவர் என்பது ஆச்ச‌ரியத்தின் அளவை கூட்டும்.

சமீபகாலமாக கவுண்டமணி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த படம் சத்யரா‌ஜின் தங்கம். அதன் பிறகு பல மாதங்கள் கழித்து, வரும் மூன்றாம் தேதி பொள்ளாச்சி மாப்ளே ‌ரிலீஸாகிறது. சத்யரா‌ஜ் நடித்திருக்கும் இந்தப் படத்தின் அட்ரா‌க்சனே கவுண்டர்தான்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விரைவில் வெளிவரயிருக்கும் ஜக்குபாயிலும் கவுண்டர் காமெடி செய்திருக்கிறார். படத்தில் சரத்துக்கு உதவி செய்யும் நண்பராக நடித்திருப்பதாக யூனிட்டிலிருந்து கசிந்த தகவல் சொல்கிறது.

இந்த இரு படங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கவுண்ட‌ரின் கொடி உயரப் பறக்க அதிக சாத்தியமுள்ளது. கவுண்ட‌ரின் ரசிகர்களுக்கு இது கற்கண்டு செய்தி.

கமலுக்குக் குட்டு – நியாயமா ஞாநி விமர்சனம்?


'ஆங்கிலம் தெ‌ரிந்தவர்களுக்கு மட்டுமே திரைக்கதை எழுத்துப் பயிற்சி முகாம் நடத்திய தமிழ் சினிமா நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த வாரக் குட்டு.'

இரண்டு வாரங்கள் முன்பு பிரபல வார இதழில் விமர்சகர் ஞாநி எழுதிய வாசகங்கள் இவை. நடிகர் கமல்ஹாசனின் ரா‌ஜ்கமல் நிறுவனம் சென்னை ஐஐடி-யுடன் இணைந்து ஆறு நாள் திரைக்கதை பயிற்சி வகுப்பை நடத்தியது. இந்தியா முழுவதிலிருந்தும் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மட்டுமல்லாது, இந்திப்படவுலகைச் சேர்ந்த இயக்குனர்களும், திரைக்கதை ஆ‌சி‌ரியர்களும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினர். முக்கியமாக பிரெஞ்சு திரைக்கதையாசி‌ரியர் ழான் க்ளாட் கே‌ரியர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுடன் திரைக்கதை குறித்து பேசினார்.

webdunia photo FILE
இந்த திரைக்கதை பயிற்சி வகுப்பை நடத்தியதற்காக கமல்ஹாசனுக்கு ஞாநி வழங்கிய நாலுவ‌‌ரி விமர்சன குட்டுதான் நீங்கள் மேலே படித்தது. ஞாநியின் இந்த விமர்சனம் ச‌‌ரியா?

இந்தக் கேள்வியை காலம் கடந்து கேட்பதற்கு காரணம் இருக்கிறது. சில தினங்கள் முன்பு இந்த திரைக்கதை பயிற்சி வகுப்பின் தொடர்ச்சியாக நிரூபர்கள் சந்திப்பு ஒன்றை கமல்ஹாசன் நடத்தினார். இந்த சந்திப்பின்போது ழான் க்ளாட் கே‌ரியரும் உடனிருந்தார்.

சென்னை பற்றி 30 குறும் படங்கள் தயா‌ரிக்கயிருப்பதாகவும், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களிடமிருந்து ஸ்கி‌ரிப்படுகள் பெறப்பட்டு இந்த குறும் படங்கள் எடுக்கப்படும் என்றும் அப்போது கமல்ஹாசன் தெ‌ரிவித்தார். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெ‌ரிய இயக்குனர்களும், மாணவர்களும் இந்த குறும் படங்களை இயக்குவார்கள்.

இந்த நிருபர்கள் சந்திப்பு நமக்கு உணர்த்துவது என்னவென்றால், கமல்ஹாசன் நடத்திய திரைக்கதை பயிற்சி வகுப்பு ஆறு நாட்களுடன் முடிந்துவிடவில்லை. அதனை தொடக்கமாக வைத்து மேலும் பல ஆக்கப்பூர்வமான வேலைகள் தொடர்ந்து நடக்கயிருக்கின்றன.

இந்த பு‌ரிதலின் அடிப்படையில் ஞாநியின் விமர்சனம் எத்தனை மேலோட்டமானது என்பதையும், அவசரத்தில் அள்ளித் தெ‌ளித்த விமர்சனம் அது என்பதையும் ஒருவர் எளிதாக பு‌ரிந்து கொள்ளலாம்.

ஞாநி தனது நாலுவ‌ரி விமர்சனத்தில் குறையாக சுட்டிக் காட்டியிருப்பது கமல்ஹாசன் திரைக்கதை பயிற்சி வகுப்பை ஆங்கிலம் தெ‌ரிந்தவர்களுக்கு மட்டுமே நடத்தினார் என்பது. திரைக்கதை பயற்சி வகுப்பில் என்ன நடந்தது என்பதை அறியாமல் ஞாநி இதனை எழுதியிருக்கிறார் என்பதே உண்மை.

ஐஐடி-யில் நடந்த திரைக்கதை பயிற்சி வகுப்பில் பாடம் நடத்தியவர்கள் சேகர் கபூர், அஞ்சும் ரா‌ஜ்பாலி, அதுல் திவா‌ரி போன்றவர்கள். இவர்கள் அனைவருக்கும் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெ‌ரியும். தமிழ் தெ‌ரியாது. ஆறு நாள் பயிற்சி வகுப்பில் வகுப்பு நடத்திய தமிழ் தெ‌ரிந்த இயக்குனாகள்; பாலுமகேந்திரா மற்றும் ஹ‌ரிஹரன் மட்டுமே. வீடியோ கான்பரன்ஸில் கலந்துரையாடல் நடத்திய ழான் க்ளாட் கே‌ரியரும் ஆங்கிலத்திலேயே தனது கலந்துரையாடலை நடத்தினார். ஆங்கிலம் தெ‌ரியாத ஒருவர் இந்த வகுப்பில் கலந்து கொண்டிருந்தால் அவரால் எதையும் பு‌ரிந்து கொண்டிருக்க முடியாது என்பதே உண்மை.

வெடிகுண்டு முருகேசன்

வெடிகுண்டு முருகேசன்
அண்ணாமலை பிலிம்ஸ் எம்.செந்தில்குமார், பி.எஸ்.கணேஷ் தயா‌ரித்திருக்கும் படம் வெடிகுண்டு முருகேசன். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தை இயக்கிய ஏ.‌ஜி.மூர்த்தி இயக்கியிருக்கிறார்.

பசுபதி முதல் முறையாக இந்தப் படத்தில் சோலோ ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு இணையான வேடத்தில் வடிவேலு. மினி பஸ் ஓட்டுனராக வரும் பசுபதிக்கும், போலீஸ் கான்ஸ்டபிள் ஜோதிர்மயிக்கும் நடுவில் ஏற்படும் மோதலும், காதலும் கதை.மினி பஸ்ஸில் பயணிகள் பயணிப்பதையும், அப்போது நடக்கும் சம்பவங்களையும் ஒரு பாடலில் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடல்கள் மற்றும் பின்னணி இசை தினா. படத்துக்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பசுபதி, வடிவேலு இணைந்துவரும் காட்சிகளில் ரசிகர்கள் வாய்விட்டு சி‌ரிப்பார்கள் என்று அடித்து கூறுகிறார் மூர்த்தி. யுகபாரதி, ஏக்நாத் பாடல்கள் எழுதியுள்ளனர். நடனம் தினேஷ், கந்தாஸ். ஆ‌க்சன் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் அமைத்துள்ளார்.படம் பிரமாதமாக வந்திருப்பதால் தமிழகம் முழுவதும் அண்ணாமலை பிலிம்ஸே படத்தை சொந்தமாக வெளியிடுகிறது. தணிக்கைக் குழு படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஞாபகங்கள்

பாடலாசி‌ரியர் பா.விஜய் ஹீரோவாகியிருக்கும் படம். காதலின் ஞாபகங்களின் தொகுப்பாக தயாராகியிருக்கிறது இப்படம்.

நான்கு கதைகளை எழுதி அவற்றை தனது நண்பர்களுக்கு படிக்கக் கொடுத்து அவர்களுக்குப் பிடித்த கதையை தேர்ந்தெடுக்கிறார் பா.விஜய். அந்த கதைதான் ஞாபகங்கள். அவரது இறந்துபோன நண்பனின் உண்மைக் கதையாம் இது.

பா.விஜய்யின் ஜோடியாக ஸ்ரீதேவிகா நடித்திருக்கிறார். வில் மேக்கர்ஸ் படத்தை தயா‌ரித்திருக்கிறது. படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதுடன் கதை, வசனம் மற்றும் பாடல்களையும் பா.விஜய்யே எழுதியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ‌ஜீவன் படத்தை இயக்கியிருக்கிறார். மயிலு படத்தை இவர் இயக்கியிருந்தாலும் முதலில் வெளியாகயிருப்பது ஞாபகங்கள். அந்த வகையில் அவரது முதல் படம் இது.

ஜேம்ஸ்விக் இசையமைத்திருக்கிறார். வெளிநாட்டில் டூயட் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை பா.விஜய்யே தயா‌ரித்திருக்கிறார். ராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் தமிழகம் எங்கும் படத்தை வெளியிடுகிறது.

வரும் 3ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

நாடோடிகள் - விமர்சனம்

நடிப்பு: சசிகுமார், பரணி, விஜய், கஞ்சா கருப்பு, அனன்யா, அபிநயா, ஷாந்தினி தேவா

ஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர்

இசை: சுந்தர் சி பாபு

தயாரிப்பு: எஸ்.மைக்கேல் ராயப்பன்

எழுத்து, இயக்கம்: பி சமுத்திரக்கனி

மக்கள் தொடர்பு: நிகில்

தொடர்ந்து பாடாவதிப் படங்களாகப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, பளிச் சென்று ஒரு படம் பார்த்தால் எத்தனைப் புத்துணர்ச்சியாக இருக்கும்... அந்தப் புத்துணர்ச்சியைத் தருகிறது நாடோடிகள்!

வெற்றிக்கான பார்முலா எது என்பதை சுப்பிரமணியபுரத்தில் சசிகுமாரோடு இணைந்து கற்றுக் கொண்ட சமுத்திரக்கனி, அதே போன்றதொரு கதைக் களத்தில் உருவாக்கியிருக்கும் படம் நாடோடிகள்.

சுப்பிரமணியபுரத்தில் விசுவாசத்துக்காக கொலையும் செய்யும் நண்பர்கள், இந்தப் படத்தில் காதலைச் சேர்த்து வைக்க வாழ்க்கையையே பணயம் வைக்கிறார்கள்.

ஒரு கவர்ன்மெண்ட் வேலை கிடைத்தால் போதும், மாமா மகளை கைப்பிடிக்கலாம் என்ற கனவில் காத்திருக்கும் கர்ணா (சசிகுமார்), வங்கி லோன் கிடைத்ததும் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து செட்டிலாகத் துடிக்கும் சந்திரன் (சென்னை 28 விஜய்), பாஸ்போர்ட் வந்ததும் வெளிநாட்டுக்குப் பறக்கும் கனவில் மிதக்கும் பாண்டி (பரணி)... என மூன்று நண்பர்கள். ராத்திரியானதும் தண்ணியடித்து மொட்டை மாடியில் கைலி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் ஒன்றாகத் தூங்கும் அளவுக்கு மிக நெருங்கிய நண்பர்கள். ரொம்ப நல்லவர்கள்...

இவர்களுக்கு இடையில் வருகிறான் இன்னொரு நண்பன் சரவணன். முன்னாள் எம்பியின் மகன். நாமக்கல் பழனிவேல் ராமன் (ஜெயப்பிரகாஷ்) எனும் கோடீஸ்வரரின் மகளைக் காதலிக்கிறான். ஆனால் இருவரின் பெற்றோரும் தங்கள் கவுரவம் பார்த்து குறுக்கே நின்றதால், காதலியைப் பிரிகிறான். கர்ணா மற்றும் அவனது நண்பர்கள் இருக்கும் ஊருக்கு வரும் அவன், திடீரென்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயல்கிறான்.

அவனைக் காப்பாற்றும் கர்ணா, விஷயம் அறிந்து, காதலர்களைச் சேர்த்து வைக்க சபதம் ஏற்கிறான். நாமக்கல்லுக்குப் போகிறார்கள் நண்பர்கள். உயிரைப் பணயம் வைத்து பழனிவேல் ராமனின் பெண்ணைத் தூக்குகிறார்கள். இதில் கர்ணாவுக்கு ஒரு கண்ணே பறிபோகும் அளவு படுகாயம் ஏற்படுகிறது. பாண்டிக்கு இரண்டு காதும் செவிடாகிப் போகிறது. சந்திரன் ஒரு காலையே இழக்கிறான். அதுமட்டுமல்ல... மூவரையும் போலீஸ் கைது செய்கிறார்கள்.

விஷயம் தெரிந்ததும் பழனிவேல் ராமன் ஆட்கள் கர்ணாவின் வீட்டில் புகுந்து நடத்திய வன்முறையில், கர்ணாவின் பாட்டி மரணிக்கிறார். இனி கர்ணாவுக்கு அரசு வேலை கிடைக்காது என்று தெரிந்து, அவர் மாமா தன் மகளை வேறு ஒருவனுக்கு கட்டிக் கொடுத்துவிட, வாழ்க்கையே பறிபோகிறது கர்ணாவுக்கு.

இவ்வளவு இழப்புகளையும் அவர்கள் நட்புக்காக தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் இத்தனை கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த ஜோடிகளோ, ஊதாரித்தனமாக ஊரைச் சுற்றி, உடல் பசி தீர்ந்ததும் பிரிந்து விடுகிறார்கள்.

கொதித்துப் போகிறார்கள் நண்பர்கள். மீண்டும் புறப்படுகிறார்கள்... தங்கள் நட்பைக் கொச்சைப்படுத்திய அந்த ஜோடிகளுக்கு பாடம் கற்பிக்க. அது எந்த மாதிரி பாடம் என்பது திரையில்!

அநேகமாக, இன்றைய இளைஞர்கள் அல்லது இளமையை ஜஸ்ட் பாஸ் செய்த முன்னாள் வாலிபர்கள் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் சந்தித்த அனுபவமே படத்தின் முதல்பாதி என்பதால், எடுத்த எடுப்பிலேயே படம் மனசுக்கு மிக அருகில் நெருக்கமாகி விடுகிறது.

கிராமங்களில் படித்துவிட்டு, வேலை தேடுகிறோம் என்ற பெயரில் சும்மா இருக்கும் பெரும்பாலான இளைஞர்களின் அன்றாட செயல்களே திரைக்கதை என்பதால் இன்னும் இணக்கமான மனசோடு படம் பார்க்கிறோம். மிகப் பிடித்துப் போகிறது.

நண்பன் தங்கையைக் காதலிப்பதா என்ற உறுத்தலோடு திரியும் இளைஞர்களுக்கு புதிய விளக்கம் கொடுத்து அவர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. தன் நண்பனை தங்கை விரும்புகிறாள் என்பது தெரிந்த பிறகு அதை கண்டும் காணாத மாதிரி நடந்து கொள்ளும் சசிகுமார் மாதிரி தங்களுக்கும் ஒரு நண்பனில்லையே என்ற ஏக்கம் நிறைய பேருக்கு வரக்கூடும்!

மூன்று நண்பர்களில் டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்பவர் சசிகுமார். நடிப்பு என்பது வலிந்து திணித்து வருவதல்ல. இயல்பாக, ஒரு மனிதனின் உணர்வுகளைக் காட்டக் கூடியதாக இருந்தாலே போதும். அதைத்தான் சசிகுமார் செய்திருக்கிறார். நம்மில் ஒருவராகவே மாறியிருப்பதால், சசிகுமாரின் சின்ன சின்ன தடுமாற்றங்கள் (நடனம்) கூட ஒரு ப்ளஸ்ஸாகவே தெரிகின்றன. நண்பன் செவித்திறன் இழந்து பரிதவிப்பதைப் பார்த்து அவர் கலங்கும் காட்சியும், தன் பாசத்துக்குரிய பாட்டியின் மரணத்தை எண்ணி அவர் உருகும் காட்சியும் மகா இயல்பானவை.

தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல கதாநாயகன் கிடைத்து விட்டார்.

மற்ற இரு நண்பர்களில் 'கல்லூரி' புகழ் பரணி கலக்குகிறார். தன் கண்ணெதிரே நண்பனின் தங்கை இன்னொரு நண்பனுக்கு பச்சக் கென்று கன்னத்தில் 'இச்' கொடுத்து விட்டுச் செல்ல, மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் அவர் திகைத்து நிற்பதில் அரங்கம் அதிர்கிறது.

'சென்னை 28' விஜய் ஓகே. ஆனால் அவர் தந்தையாக வரும் நபர் அவரை விட அருமையாக நடித்துள்ளார்.

நாயகிகளில் அனன்யா அசத்தல் அழகு. அபிநயாவுக்கு நல்ல வாய்ப்புகள் வரக்கூடும்.

மற்ற புதுமுகங்களும் நிறைவாகச் செய்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் வழக்கம் போல பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் இரண்டாம் பகுதிதான் பலருக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. ஆனால் இந்தக் கதைக்கு வேறு எந்த மாதிரியான தொடர்ச்சியைத் தந்தாலும் அதில் செயற்கைத்தனமே மிஞ்சியிருக்கும். சமுத்திரக்கனி செய்த தவறு, இந்த இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட சீரியலில் வருவது போல காட்சிகளை ஜவ்வாக இழுத்திருப்பதுதான். அதைத் தவிர்த்திருக்கலாம். க்ளைமாக்ஸ் வசனங்களில் இன்னும் அழுத்தம் தேவை.

ஆனால் படத்தின் நிறைவுக் காட்சி அட்டகாசம். அதுதான் நட்பின் இயல்பும் கூட... தன்னோடு சேரும் எதையும் எரிக்கும் நெருப்பு மாதிரி நட்பு என்பதை உணர்த்தும் காட்சி அது!

நண்பர்களால் கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கப்பட்ட காதல், இணை பிரியாமல் இருக்கிறதா இல்லையா என்று தொடர்ந்து கண்காணிப்பதில், அந்த நண்பர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதுதான் சமுத்திரக்கனி சொல்லும் நீதி. சரிதான்... ஆனால் பல நட்புகள், அவரவருக்கு திருமணமாகி குடும்பம் குழந்தை என செட்டிலானதும் பிரிந்து போகிற யதார்த்தத்தையும் மறந்துவிடக் கூடாதல்லவா... (அது தனியாக படமாக்கப்படவேண்டிய சமாச்சாரம் என்கிறீர்களா!!)

சுந்தர் சி பாபு இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. அந்த 'சம்போ...' பாடல் படத்துக்கு ஜெட் வேக எபெக்ட் தருவது நிஜம்.

கதிரின் ஒளிப்பதிவு இயல்பாக உள்ளது. எடிட்டர் ரமேஷ் தனது கத்தரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம்.

நாடோடிகள் ஒரு மிகச்சிறந்த படமாக இல்லாமல் இருக்கலாம்... ஆனால் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு நல்ல படம் என்பது மட்டும் உண்மை.

அதனால்தான் பாக்ஸ் ஆபீஸில் இந்த நாடோடிகளுக்கு ஏற்கெனவே க்ரீடம் சூட்டிவிட்டார்கள் ரசிகர்களும்!

தீவிரவாதியுடன் தொடர்பு-மணிப்பூர் நடிகை கைது


மணிப்பூர் பிரிவினைவாத இயக்கத் தலைவருடன் ஒரே ஹோட்டல் அறையில் தங்கிய பிரபல மணிப்பூர் நடிகை தேவிதா கைது செய்யப்பட்டார்.

மணிப்பூர் மாநிலத்தின் முன்னணி நடிகை உரிக்கின்பாம் தேவிதா. பல விருதுகளை வாங்கி குவித்துள்ள 24 வயதான இந்த இளம் நடிகை கடந்த 16ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி வந்திருந்தார். அப்போது அவருடன் ஹோட்டலில் தீவிரவாதி ஒருவர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து டெல்லி போலீசார், அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அவரது அறையை சோதனையிட்டனர். அப்போது அவருடன் ரகுநாத் (48) என்பவர் தங்கியிருந்தது தெரியவந்தது. இந்த ரகுநாத் காங்லேய் யாவோல் குன்னா லுப் (கேஒய்கேஎல்) என்ற மணிப்பூரை சேர்ந்த பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் ஆவர்.

இதையடுத்து போலீசார் ரகுநாத்தை கைது செய்தனர். தேவிதாவிடம் விசாரணை செய்துவிட்டு அவரை விட்டுவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை இம்பால் திரும்பிய தேவிதாவை அந்நகர போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பெண் போலீஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டார்.

இது குறித்து அந்த நடிகையின் தாயார் உமாபதி தேவி கூறுகையில், என் மகள் அப்பாவி. அவருக்கு ஒன்று தெரியாது என்றார்.

டெல்லியில் அந்த பிரிவினைவாத அமைப்பு தேவிதாவின் உதவியுடன் முகாம் எதுவும் அமைக்க திட்டமிட்டுள்ளதா என போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நியூயார்க்குக்கு வசூல் மழை


யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்க, ஜான் ஆப்ரகாம், காத்ரீனா கைப், இர்பான் கான் நடிக்க உருவாகி வெளியாகியுள்ள நியூயார்க் இந்திப் படம் வசூல் அறுவைடையை அமோகமாக செய்து கொண்டுள்ளதாம்.

படம் வெளியான 3 நாட்களிலேயே ரூ. 35 கோடி வசூலை ஈட்டியுள்ளதாம். உலகம் முழுவதும் ஜூன் 26ம் தேதி இந்தப் படம் திரைக்கு வந்தது. வெளியான 3 நாட்களிலேயே ரூ. 35 கோடி அளவுக்கு வருவாயை அள்ளியுள்ளதாம்.

இந்த ஆண்டின் வசூல் சாதனையை இப்படம் மிஞ்சியுள்ளதாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் கூறுகிறது.

கடந்த ஆண்டு இதே பட நிறுவனம் தயாரித்த ரப் நே பனா தி ஜோடி படம் மிகப் பெரிய வசூலை ஈட்டியது. இந்த நிலையில் இந்த வருடத்தில் வெளியான முதல் படமும் மிகப் பெரிய வசூலை ஈட்டியிருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறது யாஷ் ராஜ் பிலிம்ஸ்.

இந்தியாவைப் போலவே வெளிநாடுகளிலும் நியூயார்க் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். ஆஸ்திரேலிய திரைப்பட ரிலீஸ் வரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளதாம் நியூயார்க். இங்கிலாந்து பட வரிசையில் 10வது இடம் கிடைத்துள்ளதாம்.

ஐக்கிய அரபு நாடுகளிலும் இப்படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

உலகம் முழுவதும் 900 திரைகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

வேலைக்காரப் பெண்ணை ஷைனிதான் கற்பழித்தார் - டிஎன்ஏ சோதனை முடிவு

தனது வீட்டு வேலைக்காரப் பெண்ணை நடிகர் ஷைனி அகுஜா கற்பழித்தது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா கூறுகையில், வேலைக்காரப் பெண் கற்பழிக்கப்பட்டது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில், தனது வீட்டு வேலைக்காரப் பெண்ணை நடிகர் ஷைனி அகுஜா கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தற்போது அந்த வாதத்திற்கு வலுவான முறையில் டிஎன்ஏ சோதனை முடிவுகள் வந்துள்ளன என்றார்.

ஷைனி அகுஜா தற்போது ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 14ம் தேதியன்று தனது வீட்டில் தனியாக இருந்த வேலைக்காரப் பெண்ணை கற்பழித்து விட்டதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது கணவர் நல்லவர், பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்பவர், வேண்டுமானால் வேலைக்காரப் பெண்தான் எனது கணவரை தூண்டி விட்டிருக்க வேண்டும் என்று ஷைனியின் மனைவி கூறியிருந்தார். இந்த நிலையில் டிஎன்ஏ சோதனை முடிவுகள் வந்துள்ளன.

இதற்கிடையே, ஜாமீன் கோரி ஷைனி சார்பில் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வைரமுத்து மகனுக்கு ஆற்றிய உதவி!

கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியும் இப்போது பாடலாசிரியராகிறார்... அதுவும் ரஜியின் எந்திரன் படத்தின் மூலம்.

இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதுவதாகத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் தன் மகன் மதன் கார்க்கியையும் பாடலாசிரியாக அறிமுகப்படுத்த விரும்பினார் வைரமுத்து.

சாதாரண படங்களில் அறிமுகமானல், புகழ் வெளிச்சம்பட நீண்ட காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்த வைரமுத்து, ரஜினியின் எந்திரன் படம் மூலம் அந்த அறிமுகம் நிகழவேண்டும் என ஆசைப்பட்டார்.

தனது ஆசையை ரஜினியிடமும், படத்தின் இயக்குநர் ஷங்கரிடமும் அவர் வெளிப்படுத்த, உடனடியாக பச்சை சிக்னல் கிடைத்தது இருவரிடமிருந்தும்.

இப்போது எந்திரன் படத்துக்காக தனது முதல் பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து மகன் மதன் கார்க்கி. ரஜினி - ஐஸ்வர்யா டூயட் பாடலை அவர்தான் எழுதியுள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

கடந்த ஆண்டு நடந்த மதனின் திருமணத்துக்கு முதல் நபராகப் போய் வாழ்த்தியவர் ரஜினி என்பது நினைவிருக்கும். மதன் கார்க்கி கவிதைகள் எழுதி வருகிறார்.

வைரமுத்துவின் இன்னொரு மகன் கபிலன் ஒரு படத்துக்கு வசனம் எழுதுவது குறிப்பிடத்தக்கது.

வி‌ஷால் மீது லிங்குசாமி புகார்

விஷாலின் முதல் படம் செல்லமே என்றாலும், அவரை இன்றுள்ள ஆக்ஷன் அந்தஸ்துக்கு உயர்த்திய படம் சண்டக்கோழி. லிங்குசாமி இயக்கிய இந்தப் படம் வி‌ஷாலுக்கு நல்ல விலாசமாக அமைந்ததை யாரும் மறுக்க முடியாது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வி‌ஷாலுக்கு நல்ல அறிமுகத்தை இப்படம் ஏற்படுத்தி தந்தது.

சண்டக்கோழி படப்பிடிப்பு முடியும் தருவாயில் படத்தை தயா‌ரித்த வி‌ஷாலின் அண்ணனுக்கும் லிங்குசாமிக்கும் முட்டிக் கொண்டது. படத்தின் பட்ஜெட் லிங்குசாமியால் எகிறிவிட்டதாக வி‌ஷால் தரப்பு குற்றம்சாட்டியது. படத்தின் விளம்பரங்களிலும் லிங்சாமியின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது. படம் அவர்கள் எதிர்பார்த்ததைவிட சூப்பர்ஹிட்டானதைத் தொடர்ந்து இந்தப் பனிப்போர் முடிவுக்கு வந்தது.

சண்டக்கோழி வெளிவந்து பல வருடங்கள் ஆனபிறகும் தூறல் நிற்காத தூவானமாக மீண்டும் பிரச்சனை. கன்னடத்தில் நடிகர் அர்ஜுன் தயா‌ரிப்பில் வாயுபுத்ரா என்ற படம் தயாராகிறது. அர்ஜுனின் சகோத‌ரி மகன் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தின் கதைதான் பிரச்சனை.

சண்டக்கோழி படத்தின் கதையை வி‌ஷால் தரப்பிலிருந்து முறைப்படி வாங்கி வாயுபுத்ராவை உருவாக்கி வருகிறார்கள். இந்த ‌ரிமேக் விவகாரம் சண்டக்கோழி கதையின் பிரம்மா லிங்குசாமிக்கு அறிவிக்கப்படவில்லை. ஒரு படத்தின் ‌ரிமேக் உ‌ரிமையை பிற மொழிக்கு விற்கும் போது கணிசமான ஒரு பகுதி படத்தின் கதையை எழுதியவருக்கு கொடுக்க வேண்டும். இது சண்டக்கோழி விவகாரத்தில் நடக்கவில்லை.

கொதித்துப்போன லிங்குசாமி, என்னுடைய கதையை என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி இன்னொருவருக்கு கொடுக்கலாம் என போர்கொடி தூக்கியிருக்கிறார். தயா‌ரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு இதற்கொரு நல்ல தீர்ப்பு சொல்லும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது பஞ்சாயத்து நடந்து வருகிறது.

ரா‌ஜ்கிரணின் பதில் ம‌ரியாதை

ரா‌ஜ்கிரணின் ரெட்சன் கி‌ரியேஷன் விரைவில் இரு பட‌ங்களை தயா‌ரிக்கிறது. இதில் ஒரு படத்தை ரா‌ஜ்கிரணே இயக்கி நடிக்கிறார். இன்னொரு படத்தை இயக்குகிறவர் லாரன்ஸ்.

நடிகராக இருந்த லாரன்ஸ் இயக்குனராக மாறிய பிறகு தமிழில் அவர் இயக்கிய முதல் படம் முனி. சரண் தயா‌ரித்த இந்தப் படத்தில் லாரன்ஸ் நடித்திருந்தாலும் அவரளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்ட‌ரில் ரா‌ஜ்கிரண் நடித்திருந்தார். அந்த ம‌ரியாதை... தனது ரெட்சன் கி‌ரியேஷன்ஸ் தயா‌ரிக்கும் படத்தை இயக்கும் பொறுப்பை லாரன்சுக்கு தந்திருக்கிறார் ரா‌ஜ்கிரண்.

முனி படத்துக்குப் பிறகு தமிழில் வேறு எந்தப் படமும் லாரன்ஸ் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டி, ராஜாதிராஜா இப்போது சிம்புதேவனின் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் என தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

ரெட்சன் கி‌ரியேஷன்ஸ் சார்பில் லாரன்ஸ் இயக்கும் படத்தின் பெயர் இன்னும் தீர்மானமாகவில்லை.

கோவா'வில் பியா!

வெங்கட் பிரபு இயக்க, ஜெய், சினேகா உள்ளிட்டோர் நடிக்க உருவாகும் கோவா படத்தில் புதிய நாயகியாக பியா இணைந்துள்ளார்.

செளந்தர்யா ரஜினிகாந்த்தின் தயாரிப்பில் உருவாகும் படம் கோவா. வெங்கட் பிரபு இயக்குகிறார். ஜெய், வைபவ், பிரேம்ஜி ஆகியோர் கதை நாயகர்களாகவும், சினேகா, ஒரு ஹாலிவுட் நாயகி உள்ளிட்டோர் கதை நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தில் ஏற்கனவே பேசப்பட்ட பூஜா நீக்கப்பட்டு அவருக்குப் பதில் இப்போது பியா சேர்ந்துள்ளார்.

ஏகன் படத்தில் 2வது நாயகியாகவும், பொய் சொல்லப் போறோம் படத்தில் கார்த்திக் குமாருடன் இணைந்து தனி நாயகியாகவும் நடித்தவர்தான் பியா.

தற்போது விஷ்ணுவுக்கு ஜோடியாக பலே பாண்டியா என்ற படத்தில் நடித்து வரும் பியா, 4வது படமாக கோவாவில் இணைந்துள்ளார்.

பியா சம்பந்தப்பட்ட காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவுள்ளனர். சில காட்சிகள் கோவாவில் படமாகவுளளனவாம்

மலேஷியா பறந்த அசல் குழு!

பூஜை போட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் சரியான கதாநாயகிகள் அமையாமல் தாமதமாகிக் கொண்டிருந்த அஜீத்தின் அசல் படப்பிடிப்பு, இப்போது ஜெட் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

முதல் கதாநாயகியாக சமீரா ரெட்டியும், அவருக்கு அடுத்த நாயகியாக பாவனாவும் இப்போது ஒப்பந்தமாகிவிட, அஜீத்துக்கு ராசியான நாடான மலேசியாவுக்கு முதல் கட்டப் படப்பிடிப்புக்காகப் பறந்துள்ளது அசல் குழு.

சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.

சென்னையிலிருந்து வெளிநாட்டுக்கு வரும் ஒரு இளைஞன் நாளைடைவில் அந்த நாட்டின் பெரிய தாதாவாகிறான். தன்னை ஒழித்துக் கட்ட முயலும் எதிரிகளை அந்த தாதா எப்படிச் சமாளிக்கிறார் என்பதுதான் அசல் படத்தின் கதை (நிறைய படங்களின் நகலாகத் தெரிகிறதே!).

பரத்வாஜ் இசையில் உருவாகும் இந்தப் படத்தின் 95 சதவிகித படப்பிடிப்பு வெளிநாடுகளிலேயே நடக்கும் என்கிறார் இயக்குநர் சரண்.

டாக்டர் ஷாருக் கான்!

லண்டனைச் சேர்ந்த பெட்போர்ட்ஷயர் பல்கலைக்கழகம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.

ஏற்கனவே ஷாருக் கான் தலை நிறைய ஏகப்பட்ட பட்டங்கள், புகழாரங்கள், பாராட்டுக்கள். இப்போது இன்னொரு சுமையாக இந்த கெளரவ டாக்டர் பட்டம்.

கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் கீழ் பெட்போர்ட்ஷயர் பல்கலைக்கழகம் இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை ஷாருக் கானுக்கு வழங்குகிறது.

ரூட்ஸ் டூ ரூட்ஸ் (Routes to Roots) என்ற நிறுவனம்தான் ஷாருக் கானுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று பெட்போர்ட்ஷயர் பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரைத்து இருந்தது. அந்த பரிந்துரை ஏற்கப்பட்டு தற்போது கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து ஷாருக் கான் கூறுகையில், ரூட்ஸ் டூ ரூட்ஸ் அமைப்பு எனது பெயரை பரிந்துரை செய்தது பாராட்டுக்குரியது, நன்றிக்குரியது. ஜூலை 10ம் தேதி லண்டனில் நடைபெறும் விழாவில் பட்டம் வழங்கப்படுகிறது. நேரில் சென்று பெறவுள்ளேன் என்றார்.

இந்த ரூட்ஸ் டூ ரூட்ஸ் அமைப்பின் காப்பாளர்களில் இருவர் நம்ம ஊர் ஜூஹி சாவ்லா மற்றும் மகேஷ் பட் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஜூஹி சாவ்லா கொல்கத்தா ஐபிஎல் அணியை ஷாருக் கானுடன் இணைந்து கூட்டாக நிர்வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாப் கியரில்' கார்த்திகா!


இன்னிய தேதியில் அதிக படங்களுடன் படு பிசியாக இருக்கும் ஒரே நாயகி கார்த்திகாதானாம்.

தூத்துக்குடியில் அறிமுகமாகி முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் கார்த்திகா. பெரிய ரேஞ்சுக்கு நடிக்காவிட்டாலும் கூட அவரது முகராசிக்காகவே நிறையப் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ராமன் தேடிய சீதை படத்தில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தவர். பாலா நடிக்கக் கூப்பிட்டு டெஸ்ட் பார்த்தார் என்ற ஒரே காரணத்தால் கோலிவுட்டில் கார்த்திகாவின் நடிப்பு மீது நல்ல அபிப்பிராயம் வந்தது நிறைய பேருக்கு.

இப்போது கார்த்திகா படு பிசியாக இருக்கிறார். காரணம், கை நிறையப் படங்களாம்.

ஐவர் பட்டாளம், தைரியம், அலையோடு விளையாடு, மதுரை சம்பவம், வைதேகி, 365 காதல் கடிதங்கள் கார்த்திகாவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது.

அத்தோடு இப்போது புதிய பெருமையும் இவருக்கு சேர்ந்துள்ளது. அது கலைஞர் கதை,வசனத்தில் உருவாகும் நீயின்றி நான் இல்லை படத்தில் நடிக்கப் போகிறார் கார்த்திகா. அதுவும் போலீஸ் வேடத்தில் வரப் போகிறாராம்.

இப்படத்தின் நாயகி மீரா ஜாஸ்மின் என்றாலும் கூட கார்த்திகாவுக்கும் நடிப்பதற்கேற்ற நல்ல ரோலாம். அதுவும் கலைஞரின் வசனத்தைப் பேசி நடிக்கப் போவதால் படு புல்லரிப்பாக காணப்படுகிறாராம்.

உருக வைக்கும் லஷ்மி ராய்!


நான் அவன் இல்லை - 2 படத்தில் லஷ்மி ராய்க்கு செமத்தியான ரோலாம். பனி மழையில் அவர் நனைந்து ஆடிப் பாடியிருக்கும் பாடல் அனைவரையும் வசீகரிக்கும் என்று கூறுகிறார் இயக்குநர் செல்வன்.

அந்தக் காலத்தில் ஜெமினிகணேசனின் நடிப்பில் வெளியாகிய படம் நான் அவன் இல்லை. அப்படத்தை அதே பெயரில் இந்தக் காலத்து இளசுகளை அடிப்படையாகக் கொண்டு மறுபடியும் படைத்து பரவசப்படுத்தியவர் செல்வன்.

நான் அவன் இல்லை ரீமேக்குக்குக் கிடைத்த வரவேற்பால் இப்போது ஏகப்பட்ட பழைய படங்களை தூசு தட்டி எடுத்து ரீமேக்கிக் கொண்டிருக்கிறது கோலிவுட்.

இந்த நிலையில் நான் அவன் இல்லை படத்தின் ரீமேக்கின் தொடர்ச்சியை உருவாக்கி முடித்துள்ளார் செல்வன்.

அதே நேமிசந்த் ஜபக் தயாரிக்க, ஜீவன் நடிக்க புத்தம் புதிய ஐந்து நாயகிகளை வைத்து முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படப்பிடிப்பை முடித்திருக்கிறார் செல்வன்.

சங்கீதா, லஷ்மி ராய், ஷ்வேதா மேனன், ஹேமமாலினி, ரச்சனா ஆகியோர் ஜீவனுடன் ஜோடி சேர்ந்துள்ளனர்.

லஷ்மி ராய் சுவிட்சர்லாந்தில் நிஜமான பனி மழையில் ஆடிப் பாடியுள்ள பாடல் அருமையாக வந்திருக்கிறதாம். ரசிகர்களை இந்தப் பாடல் மூலம் வசீகரிப்பார் லஷ்மி ராய். சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார் என்கிறார் செல்வன்.

படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். பிந்தைய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். ஆகஸ்ட் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

'பூ'வுக்குப் பிடித்த முத்தம்!


முத்தக் காட்சிகளில் நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. காட்சிக்குப் பொருத்தமானதாக இருந்தால் தாராளமாக நடிக்கலாம் என்கிறார் பூ நாயகி பார்வதி.

மலையாளத்திலிருந்து பூ மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதி. அந்தப் படத்திற்குப் பிறகு டக்கென கன்னடத்திற்குத் தாவி விட்டார்.

மலே பரலி, மஞ்சு இரலி என்ற படத்தில் நடித்து வரும் பார்வதி, இப்படத்தில், நாயகன் ஸ்ரீநகர் கிட்டியுடன் முத்தக் காட்சியில் நடித்துள்ளாராம். இதனால் கன்னட ரசிகர்கள் பரபரப்பாகிக் கிடக்கிறார்கள்.

பூவுக்குள் இப்படி ஒரு பூகம்பமா என்று வியந்து போய் பார்வதியிடம் கேட்டால், நடிப்பில் எல்லாமே உண்டு. முத்தம் பெரிய விஷயமில்ல, புதிய விஷயமும் இல்லை.

பல்வேறு வகையான உணர்வுகளை சினிமாவில் காட்டுகிறார்கள். அதில் ஒன்றுதான் முத்தம். காட்சிக்குப் பொருத்தமாக இருந்தால் நடிக்கலாம்.

கணவன், மனைவிக்கு இடையே முத்தம் இல்லாமல் இருக்குமா, காதலில் முத்தம் இல்லாத காதல் எங்கேனும் உண்டா. இதைத்தானே சினிமாவிலும் காட்டுகிறார்கள். அதில் என்ன தவறு. நிஜத்தைத்தான் காட்டுகிறார்கள்.

முத்தம் இருக்காமே என்று நினைத்து யாரும் படம் பார்க்க வரக் கூடாது. அப்படி வந்தால்தான் தவறு என்கிறார் பார்வதி.

பூ படத்தில் வந்து போன பொண்ணா இது என்று ஆச்சரியா இருக்குல்ல..

'காத்ரீனா, கரீனா ரொம்ப செக்ஸி'

காத்ரீனா கைப், கரீனா கபூர் இருவருக்குமே செக்ஸியான உடல் அமைப்பு என்று சிலாக்கிறார் 'மாக்கோ மேன்' அக்ஷய் குமார்.

வாயில் வருவதை பட்டென்று போட்டு உடைத்து பேசி விடும் சிலரில் அக்ஷய்குமாரும் ஒருவர். மேடையில் பூனை நடை போடப் போகும்போது பேன்ட் ஜிப்பை கழற்ற முடியாமல் திணறிப் போய் படாரென்று மனைவியிடம் போய் ஜிப்பை கழற்றி விடேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி, வழக்கிலும் சிக்கி, போலீஸாரிடம் சரணடைந்தவர் அக்ஷய்குமார்.

இந்த நிலையில் இன்னொரு வில்லங்கப் பேச்சைப் பேசியுள்ளார் குமார். காத்ரீனா மற்றும் கரீனா ஆகிய இருவருக்குமே நல்ல செக்ஸியான பாடி என்று கூறியுள்ளார் குமார்.

நான் இதுவரை நடித்த நடிகைகளிலேயே மிகவும் செக்ஸியான உடலமைப்புக் கொண்டவர்கள் காத்ரீனாவும், கரீனாவும்தான் என்கிறார் குமார்.

கடந்த 18 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கும் அக்ஷய் குமார், இதுவரை காத்ரீனா மற்றும் கரீனாவுடன் மட்டுமே அதிக படங்களில் ஜோடி சேர்ந்துள்ளார். கரீனாவுடன் 5 முறையும், காத்ரீனாவுடன் 4 முறையும் ஜோடி சேர்ந்துள்ளார்.

இருவருடனும் ஒரே நேரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் யாரை விடுவது, யாருடன் இணைவது என்பதை தேர்வு செய்ய முடியாமல் தான் திணறிப் போய் விடுவேன் என்கிறார் சிலிர்ப்பு குறையாமல்.

தான் ஒரு மூத்த நடிகர் என்பதால் காத்ரீனாவும், கரீனாவும் தன்னிடம் டிப்ஸ் கேட்டு அணுகுவதாக கூறும் அக்ஷய், மூத்த நடிகர் என்ற முறையில் நிச்சயம் நான் அவர்களுக்கு உதவுகிறேன். நான் கற்றுக் கொண்டதை அவர்களுக்கும் கற்றுத் தருகிறேன் என்கிறார்.

அவர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று மடக்கலாக கேட்டால், இருவரிடமிருந்தும் நான் கற்றுக் கொண்டதை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதே நல்ல அனுபவம்தானே என்கிறார்.

கரீனாவுடன் அக்ஷய் ஜோடி போட்டுள்ள கம்பக்த் இஷ்க் ஜூலை 3ம் தேதி ரிலீஸாகிறது.

அக்ஷய் ரொம்ப பத்திரமா இருங்க, சல்மானும், சைபும் சேர்ந்து வந்து 'புட் பால்' ஆடிடப் போறாங்க!

எந்திரன்-சாபு சிரில் ஓவர் 'பீலா'!

எந்திரன் திரைப்படம் உலகின் மிகச் சிறந்த திரைப்படம் என்பதை நிரூபிக்கும் அளவு அமையும் என்கிறார் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில்.

இந்தியாவின் ட்ரெண்ட் செட்டர் எனும் அளவுக்கு மெகா படங்களுக்கு பிரமாண்டமான செட்களை அமைப்பதில் நிபுணர் சாபு சிரில். ரஜினியின் கனவுப் படமான எந்திரனுக்கு இவர்தான் கலை இயக்குனர்.சென்னைக்கு அருகே மாயாஜால் எதிரே, சாபு சிரில் அமைத்துள்ள பிரமாண்ட செட்தான் இன்றைக்கு கிழக்குக் கடற்கரைச் சாலையின் மிகப்பெரிய சுற்றுலா மையமாகிவிட்டது.

இந்த செட்டுக்கு ஆன செலவு மட்டும் ரூ.5 கோடியாம். இந்திய திரையுலக வரலாற்றில் இத்தனை கோடி செலவழித்து க்ளைமாக்ஸுக்கு யாரும் செட் போட்டதில்லை என்கிறார்கள்.

இந்த மெகா செட்டில்தான் எந்திரனில் விஞ்ஞானியாக வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி 100 ரோபோக்களோடு மோதுவதாக காட்சிகளை எடுக்கிறார்கள். இந்த 100 ரோபோக்களும் விஞ்ஞானி ரஜினியைப் போன்றே தோற்றம் கொண்டவை என்பதுதான் இந்தக் காட்சியின் விசேஷம்.

எந்திரன் சிறப்பு குறித்து ஒரு நாளிதழுக்கு சாபு சிரில் அளித்துள்ள பேட்டி:

"5 ஆண்டு இடைவெளிக்குப் பின் நான் செய்யும் தமிழ் திரைப்படம் எந்திரன் - தி ரோபோ. அதிகமாக பாலிவுட் படங்களைத்தான் இப்போது ஒப்புக் கொள்கிறேன். காரணம், பாலிவுட் படங்களின் பட்ஜெட் பெரியது. பெரிய, வித்தியாசமான செட்களை அமைக்க சரியான களமாக அவை அமைகின்றன.

100 வது படம் எந்திரன்!

எந்திரனைப் பொறுத்தவரை, அது எனக்கு மிகவும் விருப்பமான ஒரு படம். காரணம் இதுதான் எனக்கு 100 வது படம். இந்தப் படத்தோடு இன்று நேற்றல்ல... 10 ஆண்டுகளாக எனக்கு தொடர்புண்டு. இந்தக் கதையை என்னிடம்தான் முதன்முதலில் சொன்னார் இயக்குநர் ஷங்கர். 10 ஆண்டுகளுக்கு முன்பே இதன் கலை இயக்குநராக ஒப்பந்தமாகிவிட்டேன். அப்போது இந்தப் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்துக்கு போட்டோ செஷன் கூட நடந்தது.

ரஜினி - பொருத்தமான தேர்வு!

பின்னர் இந்தப் படத்தில் ஷாரூக் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இப்போது ரஜினிகாந்த் இந்தப்படத்தில் நடிக்கிறார். அவர் இந்தப் படத்துக்கு மிகப் பொருத்தமானவர்...

அலுமினியம் கலந்த உலோகத் தகடுகளால் (Aluminum Composite Panel) இந்தப் படத்துக்கு செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரி செட் இந்தியாவிலேயே எந்திரனுக்குதான் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கு ஆபத்து விளைவிக்காத, மரத்தை விட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செலவு பிடிப்பது இந்த அலுமினியக் கலவை தகடுகள். பார்ப்பதற்கும் மிகப் பிரமாதமான பினிஷிங் கிடைக்கும். விரும்பிய மாதிரி மடக்க முடியும். இன்னொன்று இந்த உலோகத்தை சுழற்சி முறையில் மறு பயன்பாட்டுக்கும் உபயோகிக்கலாம்.

குறித்த பட்ஜெட்டுக்குள் எடுக்கும் விஞ்ஞானப் படங்களில் பணிபுரிவதில் எப்போதுமே அதிக ஆர்வம் உண்டு எனக்கு. ஆனால் ஹாலிவுட்டுக்கு இணையாக இந்தியப் படங்களில் விஞ்ஞான செட்களை அமைப்பதில் உள்ள சவால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அந்த வகையில் எந்திரனுக்கு செட் அமைப்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலாக நினைக்கிறேன். உலகின் மிகச் சிறந்த கலைப் படைப்பாக எந்திரன் அமையும் என்பதை நிரூபிப்பேன்", என்கிறார் சாபு சிரில்.

ஆல் தி பெஸ்ட் எந்திரன் டீம்!

என் குழந்தைகளின் தந்தை ஜாக்சன் அல்ல-டெபோரா ரோ

லாஸ் ஏஞ்சலெஸ்: மைக்கேல் ஜாக்சனுக்கும், எனக்கும் இடையே பிறந்ததாக கருதப்படும் எனது இரு குழந்தைகளுக்கும் உண்மையான தந்த மைக்கேல் ஜாக்சன் அல்ல. செயற்கை முறையில் கருத்தரித்தே இந்தக் குழந்தைகளை நான் பெற்றேன் என்று கூறியுள்ளார் ஜாக்சனின் 2வது மனைவியான டெபோரா ரோ.

டெபோரா ஒரு நர்ஸ் ஆவார். மைக்கேல் ஜாக்சனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது அவரைக் கவனித்துக் கொள்வதற்காக வந்தவர். ஜாக்சன், டெபோரா மீது காதல் கொண்டு அவரை மணந்து கொண்டார்.

இந்தத் தம்பதிக்கு பாரீஸ் மற்றும் பிரின்ஸ் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்தக் குழந்தைகள் இருவரும் ஜாக்சன் வசமே இருந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஜாக்சன் தந்தை அல்ல. செயற்கை முறையில் கருத்தரித்தே இவர்களைப் பெற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் டெபோரா.

இதுகுறித்து டெபோரா அளித்துள்ள பேட்டியில், இரு குழந்தைகளையும் அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து பெறப்பட்ட விந்தனுவைக் கொண்டு செயற்கை முறையில் கருத்தரித்தே நான் பெற்றேன்.

இருவருக்கும் தந்தை மைக்கேல் இல்லாவிட்டாலும் கூட நான்தான் தாய். எனவே இருவரையும் நானே வளர்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் டெபோரா.

பாடப்படாத 200 பாடல்கள்..

இதற்கிடையே, மைக்கேல் ஜாக்சன் தானே எழுதி, இசையமைத்த 200 பாடல்களை வைத்து விட்டுச் சென்றுள்ளாராம்.

இவை ஒருமுறை கூட பாடப்படாதவை. இவை தனக்குப் பின்னால் தனது குழந்தைகளுக்காக இருக்கட்டும் என கூறி வந்தாராம் ஜாக்சன்.

விலங்குகளை நேசித்த ஜாக்சன்-பண்ணை இல்லத்தில் சரணாலயம்

லாஸ் ஏஞ்சலெஸ்: இசைக்கு அடுத்து குழந்தைகள் மீதும், விலங்குகள் மீதும் அதீதா பாசம் வைத்திருந்தவர் ஜாக்சன். கலிபோர்னியா மாநிலத்தின் நெவர்லேன்ட் பள்ளத்தாக்குப் பகுதியில் அவர் அமைத்த பிரமாண்ட பண்ணை இல்லத்தில் சரணாலயம் ஒன்றையே நிறுவியிருந்தார்.

கலிபோர்னியாவின் நெவர்லேன்ட் பள்ளத்தாக்குப் பகுதியில் ஜாக்சனுக்குச் சொந்தமாக பிரமாண்ட பண்ணை இருந்தது.

இந்த பண்ணை 2800 ஏக்கர் பரப்பளவிலானது. முன்பு இங்கு பொழுதுபோக்கு பூங்கா ஒன்று இருந்தது. இந்த இடத்தை தனது பண்ணை இல்லமாக மாற்றிய ஜாக்சன் அங்கு பிரமாண்ட சரணாலயம் ஒன்றையும் அமைத்து பல்வேறு விலங்குகளையும் வளர்த்து வ்நதார்.

சிறு வயது முதலே ஜாக்சனுக்கு விலங்குகள் என்றால் பிரியம் அதிகம். கலிபோர்னியாவின் என்சினோ நகரில் ஆரம்பத்தில் ஜாக்சன் குடும்பம் வசித்து வந்தபோது, ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றை விரும்பி வளர்த்து வந்தார் ஜாக்சன்.

அதேபோல ஜாக்சன் வளர்த்து வந்த சிம்பன்சி ஒன்றும் உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. காரணம், அதை தனது குழந்தை என்று ஜாக்சன் வர்ணித்ததால்தான்.

பப்பிள்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்த சிம்பன்சி ஜாக்சனை விட்டுப் பிரியாமல் இருந்து வந்தது. தனக்குத் தானே டிரஸ் போட்டுக் கொள்ளும், டாய்லெட் வந்தால் கண்ட இடத்தில் போகாமல் பாத்ரூமைப் பயன்படுத்தும், ஜாக்சனின் இசைக்கேற்ப ஆடவும் செய்யும். 80களில் மிகவும் பிரபலமாக இருந்தது இந்த சிம்பன்சி.

இதேபோல ஒட்டகச் சிவிங்கி, புலிகள் உள்ளிட்டவற்றையும் தனது சரணாலயத்தில் வளர்த்து வந்தார் ஜாக்சன். அவருக்கு பாம்புகள் என்றால் மிகவும் விருப்பம். ஏகப்பட்ட பாம்பு வகைகளையும் தனது பண்ணையில் வைத்திருந்தார்

ஜாக்சனின் கடைசிக் கோலம்-முடி கொட்டி, மூக்கு நசுங்கி, எலும்பும் தோளுமாய் இருந்த பரிதாபம்!

லாஸ் ஏஞ்சலெஸ்: பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை லீக் ஆகியுள்ளது. முடி கொட்டி வழுக்கைத் தலையுடன், வயிற்றில் எந்தவித உணவுப் பொருளும் இல்லாமல், வெறும் மருந்துகள் மட்டுமே இருந்ததாகவும், மிகப் பரிதாபமான கோலத்தில், வெறும் எலும்புக் கூடாக ஜாக்சன் காணப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த தி சன் பத்திரிக்கை ஜாக்சனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரங்களை கசிய விட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் அதிர்ச்சியூட்டும் வகையி்ல் உள்ளது.

உலகையே தனது ஆட்டத்தாலும், திறமையாலும் கட்டிப் போட்டு வைத்திருந்த ஜாக்சன், கடைசி நாட்களில் எலும்பும் தோளுமாய், எடை குறைந்து போய், தலையில் முடி கொட்டி வழுக்கைத் தலையுடன் பரிதாபமான நிலையில் இருந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரங்கள் ..

கிட்டத்தட்ட ஒரு எலும்புக் கூட்டைப் பார்ப்பது போலவே இருந்தது ஜாக்சனின் உடல். அந்த அளவுக்கு எடை குறைந்து போய் மிகவும் மெலிந்து காணப்பட்டார் ஜாக்சன்.

தலையில் முடி கொட்டி வழுக்கையாக காணப்பட்டது. இதை மறைக்க அவர் விக் அணிந்து வந்துள்ளார். அவரது உடல் முழுக்க ஊசி போட்ட அடையாளங்கள் காணப்பட்டன.

மைக்கேல் ஜாக்சன் இறந்தபோது அவரது உடல் எடை வெறும் 50 கிலோவாக மட்டுமே இருந்தது. அவரது வயிறு காலியாக இருந்தது. அதில் கடைசியாக சாப்பிட்ட சில மாத்திரைகள் மட்டுமே இருந்தன.

ஜாக்சன் தினசரி ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். இதனால்தான் எடை வெகுவாக குறைந்து போய் விட்டது. சில நேரம் சாப்பிடக் கூட மாட்டாராம்.

தினசரி மூன்று வேளை அவர் பெயின் கில்லர்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். இவை ஊக்கமருந்து கலந்தவை. இந்த ஊசியை தானே போட்டுக் கொள்வது வழக்கம் எனத் தெரிகிறது. இதன் காரணமாகவே உடலின் பல இடங்களிலும் ஊசி போடப்பட்ட அடையாளங்கள் தெரிகின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் 13 முறை காஸ்மெட்டிக் அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளார் ஜாக்சன். அவற்றுக்கான அடையாளத் தழும்புகளும் உடலில் உள்ளன.

ஜாக்சனின் உயரம் 180 செமீ ஆகும். கடைசியாக அவர் பயன்படுத்திய பெயின் கில்லர் ஊசி மருந்துதான் மரணத்திற்குக் காரணமாக இருக்கக் கூடும். இதை உறுதி செய்ய டாக்சிகாலஜி சோதனைகள் செய்யப்படவுள்ளன.

பெப்சி விளம்பரத்தின்போது நடந்த சிறிய தீவிபத்தில் அவரது இடது காதுக்கு மேல் பகுதி முடி கருகிப் போய் விட்டது. அதுதொடர்பான அடையாளம் காணப்பட்டது.

ஜாக்சனின் மார்புப் பகுதியில் நான்கு ஊசி போட்ட அடையாளங்கள் உள்ளன. மாரடைப்பு ஏற்பட்டபோது அவருடைய இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க போடப்பட்ட அட்ரீனலின் ஊசியாக அவை இருக்கக் கூடும்.

ஜாக்சன் மாரடைப்பு ஏற்பட்டு துடித்தபோது அவரை பிழைக்க டாக்டர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சியின்போது அவரது விலா எலும்பில் சில முறிந்துள்ளன.

அவரது முழங்கால்கள், கன்னம் ஆகியவற்றில் லேசான காயங்கள் உள்ளன. இவற்றுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. முதுகில் சில வெட்டுக் காயங்களும் காணப்படுகின்றன.

ஜாக்சனின் வலது பக்க மூக்கு கிட்டத்தட்ட நசுங்கிப் போய் விட்டது. மூக்கின் வலது மற்றும் இடது புறங்களை இணைக்கும் எலும்புப் பகுதியையே காணவில்லை.
பிளாஸ்டிக் சர்ஜரியால் வந்த வினை இது என்று கருதப்படுகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஜாக்சன் துடித்ததை நடிப்பு என நினைத்த மகன்..

இதற்கிடையே ஜாக்சன் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து துடித்தபோது, அதை நடிப்பு என நினைத்துள்ளார் அவரது மூத்த மகன் பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்.

இதுகுறித்து ஜாக்சனின் பயோகிராபர் ஸ்டேஸி பிரவுன் கூறுகையில், தனது தந்தை ஏதோ நடிக்கிறார் என்று பிரின்ஸ் நினைத்து விட்டான். அவனுக்கு உண்மை என்னவென்று புரியவில்லை. பிறகு டாக்டர்கள் வந்து பார்த்தபோதுதான் ஏதோ நடக்கிறது என்று அவனுக்குப் புரிந்தது.

அதன் பின்னர் ஜாக்சனுக்கு அருகிலேயே இருந்து அனைத்தையும் கூர்ந்து கவனித்தான் பிரின்ஸ் என்று கூறியுள்ளார்

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் - சிரஞ்சீவி


"ஒருவர் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்ய முடியாது. அதே போலத்தான் நானும் இரு தொழில்களில் கவனம் செலுத்த விரும்பவில்லை. அரசியல்தான் இனி என் முழு நேரப் பணி. சினிமாவில் இனி நடிக்க மாட்டேன்" என பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

ஹைதராபாத் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் சிரஞ்சீவி கூறியதாவது:

சினிமா துறை என் பிறந்த வீடு; அரசியல் புகுந்த வீடு. பிறந்த வீடு எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு சென்ற பின்னால் கணவரை பிரிந்து, பிறந்த வீட்டிற்கு போக முடியாதல்லவா? அதுபோலத்தான் நான் அரசியலுக்கு வந்ததில் தவறேதுமில்லை.

தற்போது என் எண்ணமெல்லாம் கட்சியை முழு அளவில் பலப்படுத்தி ஆட்சியைப் பிடித்து மக்களுக்கு பணி செய்வதில்தான் உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிக்கச் செல்வது தர்மமான செயல் இல்லை.

சமீபத்தில் ஆடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது மேலும் ஒரு சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்கும் என, வாய் தவறி கூறி விட்டேன். ஆனால், எதிர்காலத்தில் நிலைமை எப்படி இருக்குமோ சொல்ல முடியாது. என் உண்மையான நோக்கம், மனநிலை எல்லாமே இப்போது அரசியல்தான்.

கடந்த தேர்தலில் 'ரயில் இன்ஜின்' சின்னத்தால் ஏற்பட்ட குளறுபடியால் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. தேர்தல் கமிஷனரிடம் புதிய சின்னம் கேட்க நான்கு சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

உதயசூரியன், குடை சின்னங்களை கேட்டு தலைமை தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளோம். கட்சியினர் அனைவரும் உதயசூரியன் சின்னத்தை விரும்புகின்றனர்," என்றார்.

சுதந்திர தினத்தில் வெளிவருகிறார் ‘கந்தசாமி’


எப்ப வருவார்... எப்படி வருவார்...’ ங்கிற கதையாகிப் போய்விட்டது ‘கந்தசாமி’ வெளிவருகிற கதை.

சாமி இப்ப வருவாரு அப்ப வருவாருன்னு சொன்னாலும்... இப்போ சாமி வருகிற நாள் உறுதியாகிவிட்டது. ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவருகிறார் கந்தசாமி.

படம் சூப்பர் ஹீரோ கதையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் படத்தில் ஏகப்பட்ட கிராபிக்ஸ் கலக்கல்கள் இருக்கிறதாம். இதனால் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து விட்ட நிலையில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டும் ஏராளமாக இருப்பதால் அதனால் தான் கந்தசாமி லேட்டாக வரவுள்ளார்.

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவார்...

சம்பளத்தில் 10 சதவீதம் ஏழைகளுக்கு ஒதுக்குவேன் -சூர்யா


“நடிகர் சூர்யா “அகரம்” பவுண்டேஷன் மூலம் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, பள்ளிக்கூடங்கள் தத்தெடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார். அடுத்து சம்பளத்தில் ஒரு தொகையை ஏழைகளுக்கு ஒதுக்கவும் முடிவு செய்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கான அறிமுகவிழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று சூர்யா பேசும்போது மேற்கண்ட தகவலை தெரிவித்தார். சூர்யா கூறியதாவது:-

எனது அடுத்த படத்தில் இருந்து சம்பளத்தில் 10 சதவீதத்தை ஏழைகளுக்கு வழங்குவேன். அந்த தொகையை தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் அளிப்பேன். அதன் மூலமாக ஏழை எளியவர்கள், ஆதரவற்றோர் போன்றோருக்கு அந்த பணம் செலவிடப்படும்.

மாதத்துக்கு ஒரு தடவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நேரத்தை செலவிடுவேன்.

தாகூரை படித்த ஜாக்சன்-ரஹ்மானுடன் இணையவும் விரும்பினார்


பாப் மேதை மைக்கேல் ஜாக்சன் தனது வாழ்நாளின் கடைசி நாட்களி்ல் ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளை விரும்பிப் படித்து வந்துள்ளார். மேலும், இந்திய இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றவும் ஆர்வத்தோடு இருந்தாராம்.

ரஹ்மானுடன் இணைந்து புதிய ஆல்பம் ஒன்றை வெளியிடும் திட்டத்தில் அவர் தீவிரமாக இருந்துள்ளார். ஆனால் எல்லாமே கை கூடாமல் போய் விட்டது.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தி்ல் ரஹ்மானின் இசையை பார்த்துப் பிரமித்துப் போயே, ரஹ்மானுடன் இணைய ஜாக்சன் ஆர்வம் கொண்டாராம்.

தாகூரின் படைப்புகள் ஜாக்சனை வெகுவாக கவர்ந்து விட்டதாம். இதன் மூலம் இந்தியாவுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் அவர் ஆர்வம் காட்டினாராம்.

இதுகுறித்து ரஹ்மானுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், லாஸ் ஏஞ்சலெஸில் நடந்த ஆஸ்கர் விருது விழாவின்போது ஜாக்சனை சந்தித்தார் ரஹ்மான். அப்போது ரஹ்மானிடம் தனது அடுத்த ஆல்பத்திற்கு இசையமைக்க வேண்டும் என ஜாக்சன் கோரிக்கை வைத்தார்.

இந்த ஆல்பத்தில் இந்திய உணர்வுகளை அதிகம் இடம் பெறச் செய்யவும் ஜாக்சன் திட்டமிட்டிருந்தார். இந்த ஆல்பம் தொடர்பாக அட்னான் சமியுடனும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ஜாக்சன். இந்திய இசைக் கருவிகளான டோலக்கு, தபலா, சாரங்கி ஆகியவற்றையும் பயன்படுத்த திட்டமிட்டிருந்தார் ஜாக்சன் என்றார் அவர்.

யுனிட்டி ஆன்தம் (unity anthem) என்று இந்த ஆல்பத்திற்கு பெயரிட்டிருந்தார் ஜாக்சன். ஏற்கனவே ஜாக்சனும், ரஹ்மானும் ஏகம் சத்யம் என்ற பெயரிலான இசை வடிவத்திற்காக இணைந்தவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

இந்திய இசைப் பக்கம் ஜாக்சனின் கவனத்தை திருப்பியவர்களில் முக்கியமானவர் ஜாக்சனின் அண்ணனான ஜெர்மைன் ஜாக்சன்தான். அதற்கு முக்கிய காரணம், ஜெர்மைனின் மனைவி ஹலிமா சண்டிகரில் சில காலம் வசித்தவர் என்பதால்.

இதை விட முக்கியமாக ஜாக்சன், கடந்த சில ஆண்டுகளாக இந்து மதம் குறித்தும் ஆர்வம் கொண்டிருந்தாராம். அதுதொடர்பான நூல்களையும் படித்து வந்தாராம்.

இதுகுறித்து சர்வதேச இந்து கழகம் என்ற அமைப்பின் தலைவர் ராஜன் செத் கூறுகையில், தியானம் செய்வது எப்படி என்பது குறித்து ஜாக்சன் படித்து வந்தார். மேலும் ஒரு சுத்த சைவமாகவும் அவர் இருந்தார்.

நான் ஒரு முறை அவரை சந்திக்க நேர்ந்தபோது இந்துக் கடவுள்களான கணேசர், நடராஜர் ஆகியோரின் சிலைகளைக் கொடுத்து விளக்க முயன்றேன். அப்போது எனக்கு நன்றாக தெரியுமே என்றபோது நான் வியந்து போனேன்.

ஒரு முறையாவது அன்னை தெரசாவை சந்தித்து விட வேண்டும் என்று தீராத ஆசையுடன் இருந்தார். ஆனால் நிறைவேறவே இல்லை.

இந்தியா குறித்து மிகவும் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார் ஜாக்சன் என்றார்.