அரசியல் விழாவாக இருந்தாலும், சினிமா விழாவாக இருந்தாலும் கலைஞருக்கு கூடும் கூட்டம் திருவிழாதான். 'நீயின்றி நானில்லை’ தொடக்க விழாவிலும் அதனைக் காணமுடிந்தது.
கருணாநிதி கதை, வசனம் எழுத இளவேனில் இயக்கும் படம் ‘நீயின்றி நான் இல்லை’. உதய்கிரண், மீரா ஜாஸ்மின், கார்த்திகா நடிக்கும் இப்படத்தின் தொடக்க விழா, ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடந்தது. மேள தாளம் முழங்க பெப்சி தொழிலாளர்கள் கலைஞரை வரவேற்றனர்.
கமல், சூர்யா, சிவக்குமார், விவேக், இசையமைப்பாளர் தேவா என மேடையை நிறைத்தனர் நட்சத்திரங்கள். படத்தை தொடங்கி வைத்து கருணாநிதி பேசியபோது,
“இந்த விழாவில் தம்பி கமலஹாசன் பேசும்போது, “தமிழை உங்களிடம் கற்றுக் கொண்டோம்” என்று குறிப்பிட்டார். நான் எழுதிய உரையாடல்களைத்தான் இன்னமும் நடிப்புத் துறைக்குள் வருபவர்கள், பேசிக்காட்டி, அந்தத் துறையிலே புகழ் பெருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
கமலஹாசனை சின்னஞ்சிறுபிள்ளையாக தமிழ் பேசியதிலிருந்து இன்றைக்கு பத்து அவதாரங்கள், பன்னிரண்டு அவதாரங்கள் என்று அவர் எடுத்து, உலகத் திரைப்படச்சந்தையில் தனக்குள்ள கீர்த்தியை நிலை நாட்டியிருக்கின்ற இந்தகாலம் வரையில் அவரை நான் நேசிப்பவன்.
ஒரு நாள் என்னுடைய வீட்டு வேலைக்காரபையன் மேலே ஓடி வந்து, மாடியில் எழுதிக் கொண்டிருந்த என்னிடம் உங்களைப் பார்க்க ஒரு அம்மா வந்திருக்கிறார். என்று சொன்னான். நான் எழுதிக்கொண்டிருந்த அறையை விட்டு வெளியே வந்து-மாடித் தாழ்வாரத்திலே பார்த்தால், உள்ளபடியே ஒரு அம்மா உட்கார்ந்திருந்தார்.வியப்புற்று நான், நீங்கள் யார், எங்கே வந்தீர்கள்? என்று கேட்டபோது, என்னைத் தெரியவில்லையா, என்று கமல் என்னைப் பார்த்து கேட்டார்.
அந்த அளவுக்கு அவ்வை சண்முகியில் அந்த ஒப்பனை இருந்தது மறுபடியும், “தசாவதாரம்” படத்திலே கூட நான் பார்த்தேன். அந்தப் பாத்திரத்தை எண்ணாமல், பாத்திரத்துக்குள் இருக்கின்ற கமல் என்கின்ற கலைஞரை நேசிக்கின்ற அடையாளமாக தொட்டிழுத்து, முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.
இந்த கதையினுடைய (‘நீயின்றி நானில்லை’) இழை என்னவென்றால், பெண்ணுரிமை, பெண்ணுக்காக மகளிர் முன்னேற்றத்துக்காக பாடுபடுகின்ற அல்லது பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்கிற ஒரு கதாநாயகனின் கதை. அதிலே ஏற்படுகின்ற விளைவு, நெளிவுகள், சுழற்சிகள் இவைகள் எல்லாம் இந்த கதையிலே பல காட்சிகளிலே அமைக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.
No comments:
Post a Comment