கெட்டவனை திருத்தும் ஹீரோயின். தமிழ் சினிமா பலமுறை அடித்து துவைத்து காயப் போட்ட கதை. அறிமுக இயக்குனர் அனந்த நாராயணன் கதையை சொல்ல எடுத்துக் கொண்டிருக்கும் களம் தமிழுக்கு புதுசு.
அழுக்கான மனிதர்கள், குப்பையும் கூளமும் நிறைந்த குறுகலான தெருக்கள், மனிதன் வசிக்கவே முடியாத சேரி குடியிருப்புகள், கைவிடப்பட்ட கல்லறைத் தோட்டம்... தமிழ் சினிமா தனது கேமரா கண்களிலிருந்து மறைக்க விரும்பும் சென்னையின் அசலான முகத்தை அதன் அழுக்கோடும், அழகோடும் அள்ளி வந்திருக்கிறது அழகப்பனின் கேமரா.
பிக்பாக்கெட்டாக வரும் அகில் தனது கேரக்டருக்காக நிறைய உழைத்திருக்கிறார். சென்னை தமிழில் இன்னும் சிரத்தை கூடியிருந்தால் அவரது அழுக்கு கேரக்டருக்கு மேலும் அழகு சேர்ந்திருக்கும்.
மீரா நந்தன் கிண்டர் கார்டன் டீச்சர். பைத்தியத்திடம் சிக்கிக் கொள்ளும்; அவரை அகில் காப்பாற்ற, அகில் மீது பைத்தியமாகிறார் மீரா. அவருக்கொரு கொடுமையான பிளாஷ்பேக்.
அகில் திருந்துவதற்காக இயக்குனர் வைத்திருக்கும் காட்சி, நமது கட்டுப்பட்டை மீறி கண்ணீரை துளிர்க்க வைக்கிறது. பாலியல் தொழிலாளியாக மாறிய பெண், என்னை மரியாதையா அடக்கம் பண்ணுவியா என கேட்பது பொட்டில் அறையும் வசனம்.
பூக்காரியாக வரும் தேவிகா அகிலிடம் தனது திருமணத்தின் போது அடுக்கும் நீள வசனத்தை தன்னம்பிக்கை நூலில் சேர்க்கலாம். அவரது ஆடம்பர திருமணம் இயக்குனர் கோட்டைவிட்ட இடங்களில் ஒன்று.
அஜயன் பாலாவிடம் சேரி பாஷை அருவியாக கொட்டுகிறது. அவரது சகோதரி பாசம் சென்டிமெண்ட் குறையை போக்குகிறது. ஆண்களிடம் மட்டுமே பழகும் பெண் நல்ல கற்பனை.
ஒவ்வொரு திருட்டின் பின்னணியிலும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் இருக்கிறது என்ற கருத்தை வால்மீகியில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த காட்சிகள் பலவற்றில் நாடகத்தனம்.
என்னடா பாண்டி பாடலை தவிர மற்றவை இளையராஜாவா இசை என்று கேட்க வைக்கின்றன. பின்னணி இசையில் மட்டுமே ராஜா தெரிகிறார்.
படத்தின் கதைக் களத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருப்பது படத்தின் மிகப் பெரிய பலம். பலவீனம் நிறைய. அகில் ஒரு பிக்பாக்கெட் என்பதை மீரா தெரிந்து கொள்ள வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அந்த அணிவகுப்பு, மீராவின் பிளாஷ்பேக், அவரது திடீர் மரணம்...
அரிதாரம் பூசாத கதாபாத்திரங்களுக்காகவும், வழக்கமான குத்துப் பாடல்களை தவிர்த்ததற்காகவும் வால்மீகியை ஒருமுறை பார்க்கலாம்.
No comments:
Post a Comment