Thursday, July 2, 2009

தீவிரவாதியுடன் தொடர்பு-மணிப்பூர் நடிகை கைது


மணிப்பூர் பிரிவினைவாத இயக்கத் தலைவருடன் ஒரே ஹோட்டல் அறையில் தங்கிய பிரபல மணிப்பூர் நடிகை தேவிதா கைது செய்யப்பட்டார்.

மணிப்பூர் மாநிலத்தின் முன்னணி நடிகை உரிக்கின்பாம் தேவிதா. பல விருதுகளை வாங்கி குவித்துள்ள 24 வயதான இந்த இளம் நடிகை கடந்த 16ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி வந்திருந்தார். அப்போது அவருடன் ஹோட்டலில் தீவிரவாதி ஒருவர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து டெல்லி போலீசார், அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அவரது அறையை சோதனையிட்டனர். அப்போது அவருடன் ரகுநாத் (48) என்பவர் தங்கியிருந்தது தெரியவந்தது. இந்த ரகுநாத் காங்லேய் யாவோல் குன்னா லுப் (கேஒய்கேஎல்) என்ற மணிப்பூரை சேர்ந்த பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் ஆவர்.

இதையடுத்து போலீசார் ரகுநாத்தை கைது செய்தனர். தேவிதாவிடம் விசாரணை செய்துவிட்டு அவரை விட்டுவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை இம்பால் திரும்பிய தேவிதாவை அந்நகர போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பெண் போலீஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டார்.

இது குறித்து அந்த நடிகையின் தாயார் உமாபதி தேவி கூறுகையில், என் மகள் அப்பாவி. அவருக்கு ஒன்று தெரியாது என்றார்.

டெல்லியில் அந்த பிரிவினைவாத அமைப்பு தேவிதாவின் உதவியுடன் முகாம் எதுவும் அமைக்க திட்டமிட்டுள்ளதா என போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment