Thursday, July 2, 2009

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் - சிரஞ்சீவி


"ஒருவர் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்ய முடியாது. அதே போலத்தான் நானும் இரு தொழில்களில் கவனம் செலுத்த விரும்பவில்லை. அரசியல்தான் இனி என் முழு நேரப் பணி. சினிமாவில் இனி நடிக்க மாட்டேன்" என பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

ஹைதராபாத் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் சிரஞ்சீவி கூறியதாவது:

சினிமா துறை என் பிறந்த வீடு; அரசியல் புகுந்த வீடு. பிறந்த வீடு எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு சென்ற பின்னால் கணவரை பிரிந்து, பிறந்த வீட்டிற்கு போக முடியாதல்லவா? அதுபோலத்தான் நான் அரசியலுக்கு வந்ததில் தவறேதுமில்லை.

தற்போது என் எண்ணமெல்லாம் கட்சியை முழு அளவில் பலப்படுத்தி ஆட்சியைப் பிடித்து மக்களுக்கு பணி செய்வதில்தான் உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிக்கச் செல்வது தர்மமான செயல் இல்லை.

சமீபத்தில் ஆடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது மேலும் ஒரு சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்கும் என, வாய் தவறி கூறி விட்டேன். ஆனால், எதிர்காலத்தில் நிலைமை எப்படி இருக்குமோ சொல்ல முடியாது. என் உண்மையான நோக்கம், மனநிலை எல்லாமே இப்போது அரசியல்தான்.

கடந்த தேர்தலில் 'ரயில் இன்ஜின்' சின்னத்தால் ஏற்பட்ட குளறுபடியால் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. தேர்தல் கமிஷனரிடம் புதிய சின்னம் கேட்க நான்கு சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

உதயசூரியன், குடை சின்னங்களை கேட்டு தலைமை தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளோம். கட்சியினர் அனைவரும் உதயசூரியன் சின்னத்தை விரும்புகின்றனர்," என்றார்.

No comments:

Post a Comment