எனக்கும் என் மனைவிக்கும் டாக்டர் ஷாலினியை மிகவும் பிடிக்கும். நம் பக்கத்துவீட்டு அக்கா போன்ற உணர்வை தரும் அவரின் அந்த தோற்றமும்.. நிறமும், நாம் பிரமிப்பாக நம்பும் பல்வேறு விசயங்களை பொட்டுனு போட்டுத்தள்ளும் அந்த அட்டகாசமான பேச்சும் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தமான விசயங்கள். இதுவரை அவரை நேரில் சந்தித்ததில்லை.
என்னுடைய டீன் ஏஜின் அந்திம காலத்தில் குமுதத்தில் ஷாலினியின் கேள்வி பதில் பகுதி ஒன்று வந்தது. அந்த பதில்கள் கொஞ்சம் வில்லங்கமாக இருக்கும். `குமுதம் ஆள் எவனோ தான் பொம்பளப்பேர்ல எழுதுறான்’ என்று அப்போது நினைத்திருக்கிறேன்.
பிற்பாடு டாக்டர் ஷாலினி என்பவர் நிஜம் என்பது தெரிந்தது. அதன்பிறகு அவரது எழுத்துக்களையும் விவாதங்களையும் தவறவிடாமல் கவனித்துவருவது வழக்கம்.
சில வருடங்களுக்கு முன் விகடனில் ஷாலினி எழுதிய உயிர்மொழி என்றொரு தொடர்வந்தது. முதல் ஐந்து வாரங்கள் அத்தனையும் தீப்பொறி தான். ஆண்களின் அம்மா செண்டிமெண்ட்டையும், பெண்கள் ஆண்களை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை தன் எழுத்தில் காலி செய்திருப்பார். ஒவ்வொரு பாயிண்ட்டும் மறுக்க முடியாதவை.
ஷாலினியைத் தவிர நிச்சயமாக அந்த தொடரை ஆண் மருத்துவர்கள் யாராவது எழுதியிருந்தால் மிக எளிதாக ஆணாதிக்க தொடர் என்று `நீயா நானா’வின் `பெண்ணியவாதிகள்’ எளிதாக முத்திரைக் குத்தியிருப்பார்கள்.
தாய்மை.. பெண்மை.. புனிதம்..என்று பெண்கள் வீசும் ஆயுதங்கள் அத்தனைக்குமான பின்னணி காரணங்களை ஷாலினி புட்டுப்புட்டு வைத்தது பெரும்பாலான வாசகிகளை கடுப்பேற்றியதாக அறிந்தேன்.
முக்கியமாக பெரும்பாலான மன நல மருத்துவர்கள் கையாளும் டார்வின், ஃபிராய்டு .. என்று மொழிப்பெயர்ப்பு சமாச்சாரமாக இல்லாமல் அந்த தொடர் ஒரு பெரியார் கண்ணோட்டம் கலந்து கட்டிய ஒரு ஆய்வு தன்மையோடு இருந்தது மிகவும் பிடித்திருந்தது.
விகடனில் வந்த முக்கியமான தொடர்களில் ஒன்று என்று உயிர்மொழி தொடரை சொல்லலாம். நானும் என் மனைவியும் ஒருவாரம் கூட அதை படிக்க தவறவிடமாட்டோம். அவ்வளவு சுவாராஸ்யமான உண்மைகளை பேசும் தொடர் அது.
திருமணம் செய்து கொள்ளும் நண்பர்களுக்கு உயிர்மொழி புத்தகத்தை பரிசாக கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அதைப் படித்தால் பெண்களின் செண்டிமெண்ட் அட்டாக்கிலிருந்தும், மாமியார் மருமகள் அட்டாக்கிலிருந்தும் ஓரளவுக்கு ஆண்கள் தப்பிக்கலாம்.
இதேப்போல் ஷாலினியை பிடிக்க இன்னொரு காரணம், நீயா நானாவில் மேக்-அப் தொடர்பான ஒரு விவாதத்தில், நீங்கள் அழகுப்படுத்திக் கொள்வதெல்லாம் பாலியலுக்கான தூண்டில் தான் என்று போட்டு தாக்கியிருப்பார். அதைக்கேட்டு அம்மணிகள் எல்லாம் மிரண்டுபோன காட்சி இருக்கே.. ஆஹா..
நன்றி -கார்ட்டுனிஸ்ட் பாலா
No comments:
Post a Comment