Monday, September 16, 2013

இல்லற வாழ்க்கையை தொடங்கப் போகிறீர்களா? இதைக் கொஞ்சம் படியுங்க!


காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் திருமணத்திற்கு முன்னதாக சில விசயங்களை பேசி தெளிவுபடுத்திக் கொண்டால் பின்னாளில் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
காதலித்து திருமணம் செய்து கொண்டால் கூட சில சமயங்களில் அதிக அளவிலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் புரிதல் இல்லாத காதல்தான். எனவே தம்பதியாகும் முன் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக பேசி புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே சொந்தங்கள், சுற்றத்தார்கள் கேட்கக் கூடிய கேள்வி எப்போ குழந்தை என்பதுதான். குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்பான விஷயம். தம்பதிகள் இருவரும் அதில் சரிசமமாகப் பொறுப்பேற்க வேண்டும்.
பொருளாதார நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே திருமணமானதும் எத்தனை ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்ற எண்ணத்தை மறைக்காமல் வெளிப்படுத்தி விடுங்கள்.
கணவனோ, மனைவியோ உடனே பெற்றோர் ஆக விரும்பலாம். அடுத்தவர் அதைத் தள்ளிப் போட நினைக்கலாம். எனவே எல்லாவற்றையும் யோசித்து, நன்றாகக் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுங்கள்.
கணவன்- மனைவி உறவு எவ்வளவுதான் நெருக்கமானது என்றாலும், இருவரில் ஒருவர் அல்லது இருவருமே குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக் கொள்ளவும் விரும்பக் கூடும்.
புகை, மதுப் பழக்கம் உள்ள கணவர் அதைத் தொடரலாமா? அவர் தனது நண்பர்களை வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வரலாமா? மனைவியின் உறவினர்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வந்தால் நல்லது என்பதைப் போன்ற விஷயங்களில் முன்னரே பேசி ஒரு தெளிவு நிலையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இல்லையெனில் அதுவே சிக்கலை ஏற்படுத்திவிடும்.
பண விவகாரத்தை முறையாகக் கையாளவில்லை என்றால் அது கணவன்- மனைவி உறவில் பெரும் குழப்பத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தும். எனவே இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். பொறுமையாக விவாதியுங்கள்.
வங்கிக் கணக்கைப் பொறுத்தவரை நீங்கள் கூட்டுக் கணக்கை விரும்புவீர்களா, அல்லது தனிக் கணக்கை விரும்புவீர்களா? வீட்டுச் செலவுக்கு உங்களின் பங்கு என்ன? என்பத குறித்து இருவரும் முன்பே பேசி முடிவுக்கு வந்து விடுவது நல்லது.
பணத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. உங்களின் வாழ்க்கை முறை எப்படி என்று திருமணத்துக்கு முன்பே விரிவாக, தெளிவாகப் பேசி விடுங்கள்.
வாரம் ஒரு முறை பெரிய ஓட்டலுக்குச் சென்று தடபுடலாகச் சாப்பிடலாமா?, மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?, பொழுது போக்குக்கு என்ன செய்யலாம்? என்றெல்லாம் விலாவாரியாகப் பேசி விடுங்கள்.
கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நாம் நல்லவராக வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவராக நீங்கள் இருக்கலாம்.
ஆனால் உங்களின் வாழ்க்கைத் துணையாக வருபவர் அதீத தெய்வ பக்தி கொண்டவராக இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களால் சரியாக ஒத்துப்போக முடியுமா? என்பதை இருவரும் பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் கணவனும், மனைவியும் கடவுள் விஷயத்தில் வேறு வேறு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து அவரவர்களின் நம்பிக்கையை அவரவரது குடும்பத்தினர் குழந்தைகளின் மீது திணிக்க முயலும்போது நிலைமை மேலும் மோசமாகலாம்.
எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாழ்க்கை சுமூகமாகப் போக உங்கள் துணையின் கடவுள் நம்பிக்கையை அறிந்துகொள்வதும், கடவுள் நம்பிக்கையில் உங்களின் நிலையைத் தெளிவுபடுத்துவதும் முக்கியம்.
நீங்கள் ஆடைகளுக்கும், சுற்றுலா செல்வதற்கும் கணக்குப் பார்க்காமல் செலவழிக்கக் கூடியவராக இருந்து, உங்களின் துணை அதெல்லாம் வீண் செலவு என்று கருதுகிறவராக இருந்தால் அங்கே பிரச்சினை எழலாம்.

நீங்கள் உங்களின் சொந்த சம்பாத்தியத்தில் அவற்றில் ஈடுபடுகிறேன் என்று கூறினாலும் நிச்சயம் பிரச்சினை உருவாகும். எனவே தாலி கட்டும் முன்பே சில விசயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு நமக்கு ஒத்து வரும் என்று தெரிந்தால் மட்டுமே மணவாழ்க்கையில் இணைவது நல்லது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

No comments:

Post a Comment