Tuesday, September 17, 2013

தி இந்து தமிழ் நாளிதழுக்கு எதிரான ஜெயமோகனின் கட்டுரை!



தி இந்துவில் (தமிழ்) வெளியாகியிருக்கும் ஜெயமோகனின் கட்டுரை, தொடர்புள்ள நாளிதழிற்கே – அதுவும் முதல் நாளிலேயே – எதிரானதாய் இருப்பதை ஆசிரியர் குழுமம் கவனித்திருக்கலாம். இத்தனை செய்திகள் எதற்காக? எனும் போது இத்தனை செய்திப் பத்திரிகைகள் எதற்காக என்கிற கேள்வியும் அதன் உள்ளேயே அடங்கியிருக்கிறது.
மேலும் ஒரு தமிழ் நாளிதழின் துவக்க நாளில் அதுவும் ஜெயமோகன் எழுதுகிறார் எனும் போது இன்னும் அட்டகாசமான ஓப்பனிங்காக இருந்திருக்கலாம். ஜெயமோகனின் தரத்திற்கு ஈடுசெய்ய முடியாத பாபா படம் மாதிரி நமத்துப் போன பட்டாசு மாதிரி கட்டுரை அமைந்தது துரதிர்ஷ்டம். வரும் கட்டுரைகளில் ஜெயமோகன் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஜெ வின் கட்டுரையோடு எனக்கு பெரும்பாலும் உடன்பாடும் சிறிதளவு மறுப்பும் உண்டு.

தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் பெருகத் பெருகத்தான், தகவல் தொடர்பில் நிறைய இடைவெளி விழுகிறது என்பது என் தனிப்பட்ட அவதானிப்பு. தொலைபேசி வசதிகள் பரவலாக இல்லாத காலத்தில் அரிதாக தொலைபேசியை உபயோகித்து ஒரு செய்தியைச் சொல்ல வேண்டு்ம் என்றாலும் நாம் சொல்ல வேண்டிய அத்தனை விஷயங்களையும் தொகுத்துக் கொண்டு பின்பு தொலைபேசியை உபயோகிக்க ஆரம்பித்தவுடன் அத்தனையையும் வரிசைக்கிரமமாக சொல்லி விடுவோம். அது போலவே, பெற வேண்டிய தகவல்களையும். ஆனால் இன்று ஒருவரை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்கிற வசதிகள் தருகிற அதீத நம்பிக்கைகள் காரணமாகவே அரைகுறையான உரையாடல்களோடும் தகவல்களோடும் முடித்துக் கொண்டு பிறகு ‘நீ பாலு சித்தப்பா வீட்டுக்கு வரச்சொன்னியா…நான் மோகன் சித்தப்பா வீட்டு வாசல்ல நின்னுட்டுதான் உனக்கு போன் செய்யறேன்’ என்று அசடு வழிகிறோம். ஒருவர் தன்னுடைய செல்போனை இன்று தவற விட்டு விட்டால் ஏறக்குறைய அவர் அநாதைதான். எவருடைய தொலைபேசி எண்களும் அவர் நினைவில் இருக்காது.
அது போலவே, ஜெயமோகனின் கட்டுரையின் படி இன்று பெருகி வரும் தகவல் வெள்ளத்தில் தனிநபரின் சிந்தனைகளும் கருத்துக்களும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டு மழுங்கடிக்கப்படுகின்றன. ஒன்றை யோசிப்பதற்குள் மேலும் வந்து விழுந்து கொண்டேயிருக்கும் செய்திகளாலும் தகவல்களாலும் எதையுமே யோசிக்க முடிவதில்லை. மேலும் இன்று பொதுவிடங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் உரையாடுவோரில் பெரும்பான்மையோர், செய்திகளை ஆராய்ந்து அதிலிருந்து தமக்கென்று சுயகருத்துக்களை தீர்மானமாக உருவாக்கிக் கொள்வதில்லை. செய்தி ஆசிரியர்களும் தொகுப்பாளர்களும் கடகடவென்று வெளித்தள்ளுவதில் தமக்கு நினைவில் தங்குவதை அல்லது அந்தச் செய்தியின் கோணத்தில் மயங்கி அதைச் சரி என எடுத்துக் கொண்டு அதை தம்முடைய கருத்தாக வைத்துக் கொண்டு உரையாடுகின்றனர். அவர்களை அணுகி அது தொடர்பாக இன்னும் நுணுக்கமான விஷயங்களைக் கேட்டால் உரையாடலைத் தொடர முடியாமல் திகைத்து நிற்கின்றனர்.
எனவே பெருகி வரும் தகவல் வெள்ளத்தில் தனிநபர்களின் சிந்தனை முற்றிலுமாக மழுங்கடிக்கப்படுகிறது என்பது உண்மை.
ஆனால் உலக மயமாக்கத்தின் காலகட்டத்தில் சிரியாவில் குண்டு வெடித்தால் அது நம் வீட்டின் வரவேற்பறையில் அதிர்வை ஏற்படுத்தும் தகவல் புரட்சியை நம்மால் தடுக்கவே முடியாது. இன்னும் பழையபடி ஆகாஷவாணியில் சரோஜ் நாராயணசாமி குரலை மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. ஒரு செய்தியின் பல்வேறு விதமான தகவல்களும் கோணங்களும் நமக்கு கிடைக்கச் செய்திருக்கும் இந்த நுட்பம் நமக்கு வரப்பிரசாதம்தான். ஜெயமோகன் அவைகளை அணுகி தொகுத்துக் கொள்வது போலவே ஒவ்வொரு தனிநபரும் செய்திகளின், தகவல்களிலுள்ள இடைவெளியை யூகித்து ஆராய்ந்து அவற்றிலிருந்து தம்முடைய தரப்பை தொகுத்து அறிந்து கொள்ளவதே சிறப்பானதாக இருக்கும்.
அந்த வகையில் இன்றைய ‘தி இந்து’ (தமிழில்) நயனதாரா குறித்த செய்தியில், அவர் நடிக்க வந்து பத்து ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் முன்னணி நடிகையாகவே நீடிப்பது குறித்தான பரவசத்தில் எனக்கும் உடன்பாடும் மகிழ்ச்சியும் உண்டு. அதில் வந்திருக்கும் நயனதாராவின் புகைப்படமும் சிறப்பாக இருக்கிறது என்பது உபசெய்தி.

No comments:

Post a Comment