சரவணா ஸ்டோர்ஸ்க்கு அடிக்கடி போவதுண்டு.
அங்கு வரும் பல்வேறு விதமான மனிதர்களை பார்க்க பிடிக்கும் என்பதும், அங்கு
வேலைப்பார்க்க வந்திருக்கும் நெல்லை மண் மணம் மாறா தொழிலாளர்களுடன் பேசுவது
பிடிக்கும் என்பதும் அங்கு போவதற்கான காரணம்.
வேலைப்பளுவுக்கிடையில்
அவர்கள் நெல்லை பேச்சுவழக்கில் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டும் கிண்டல்
செய்து கொண்டுமிருப்பார்கள். சமயங்களில் ரொம்ப நேரம் எதும் வாங்காமல்
சும்மா நோண்டிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களையும் தங்களுக்குள்
ஓட்டிக்கொள்வதையும் கவனித்திருக்கிறேன்.
அங்கு
எப்போது சென்றாலும் வேலைப்பார்க்கும் ஏதாவது ஒரு பையனிடமோ பெண்ணிடமோ
பேச்சுக் கொடுக்க ஆரம்பிப்பேன். “நானும் திருநெல்வேலிக்காரந்தாம்டே..”னு
சொல்லி பேச ஆரம்பித்தால் போதும் அவங்களும் உற்சாகமாப்பேச ஆரம்பிப்பார்கள்.
அவர்களின் கதைகளை கேட்க பரிதாபமாக இருக்கும். அவர்களிடம் பேசிவிட்டு வரும்
நாட்கள் எல்லாம் மனம் கனத்துப்போகும்.
இன்று
அங்கு சென்றிருந்தபோது அந்த காட்சியைக் கண்டேன். ஒரு பதினாறு வயது
மதிக்கத்தக்க எலும்பு தோலுமாக இருந்த இளம்பெண் ஒருவர் சோர்ந்துபோய் துணிகள்
தொங்கவிடப்பட்ட இடங்களுக்கு நடுவில் மறைவாய் அமர்ந்திருந்தார்.
“என்னம்மா ஆச்சு..” என்றேன்.
“என்னம்மா ஆச்சு..” என்றேன்.
“கால்வலிண்ணே… முடியல..” என்றார் பரிதாபமாக.
“ஏன் உங்களுக்கு உட்கார நாற்காலி எதுவும் வைக்க மாட்டாங்களா..?”
“அதெல்லாம்
கிடையாதுண்ணே.. காலையில வந்ததுல இருந்து திரும்ப தூங்கப்போறவரைக்கும்
பதினாறு மணிநேரம் நாங்க நின்னுட்டு தான் வேலைப்பார்க்கணும்.. வலி
எடுக்கும்.. கொஞ்சம் ஓரமா உக்காரலாம்னு பார்த்தா சூப்பர்வைஸருங்க கண்ல
பட்டா செத்தோம்..” என்று அவர் கூறியபோது என் கால்கள் வலிக்க ஆரம்பித்தது.
சரவணா ஸ்டோருக்குள் பொருட்கள் வாங்கவோ, குறைந்த பட்சம் அந்த பல அடுக்கு மாளிகைக்குள் சுற்றிப்பார்க்கவாவது நாம் சென்றிருப்போம்.
சரவணா
ஸ்டோருக்குள் நுழைந்தால் முதல் ஒரு மணிநேரம் உற்சாகமாக சுற்றி வந்து
பொருட்களை வாங்க முடியும். அதன்பிறகு தன்னியல்பாக உங்கள் கால்களில்
உளைச்சல் ஏற்படும். எங்காவது உட்காரலாம் என்று கால்கள் கெஞ்சும்.
அந்தமாதிரியான
தருணத்தில் எப்போதாவது நீங்கள் அங்கு பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே
பணிபுரியும் ஊழியர்களின் கால்களைப் பற்றி யோசித்துப்
பார்த்திருக்கிறீர்களா..
நம்முடைய
கால்களைப் போன்றே அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கும் கால்கள் உண்டு. அந்த
கால்களுக்கும் வலி எடுக்கும்.. அவர்கள் எங்கு உட்கார்கிறார்கள் ஏன்
அவர்களுக்கு உட்கார இருக்கை கொடுக்கவில்லை என்பது குறித்து எப்போதாவது
யோசித்திருக்கிறீர்களா..
இப்படி
பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே வேலைப்பார்க்கும் நிலைக்கு காரணம்
அவர்களின் குடும்ப சூழல். அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது சரவணா ஸ்டோர்
கும்பல்.
தென்மாவட்டங்களில் இருந்து
குறைவான ஊதியத்திற்கு கொத்தடிமைகளை இறக்குமதி செய்த சரவணா ஸ்டோர் ஓனர்கள்
இப்போது வட இந்திய தொழிலாளர்களை குறிவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு
தமிழர்களை விட இன்னும்கூட குறைவாக ஊதியம் கொடுக்கலாம். அவர்களின் குடும்ப
வறுமையை பயன்படுத்தி சுரண்டுவதுதான் ஓனர்களின் தந்திரம். குறைவான
ஊதியத்திலும் முடிவெட்டுறது முதற்கொண்டு பல காரணங்களைச் சொல்லி பிடித்தமும்
செய்துக் கொள்வார்கள்.
இப்படி
தொழிலாளர்களிடம் ஆட்டையப்போட்ட பணத்தை தான் நடிகைகளுக்கும் நடிகன்களுக்கும்
விளம்பரம் என்றப்பெயரில் வாரி இறைக்கிறார்கள் சரவணாஸ்டோர்ஸ் முதலாளிகள்.
இந்தமாதிரி
தொழிலாளர்களை சுரண்டும் நிறுவனத்திற்கு `அகரம் பவுண்டேசன்’ என்றப்பெயரில்
கல்வி சேவை செய்யும் மனிதநேயமிக்க சூர்யா விளம்பரதாரர்.. எப்படி இருக்கு
சேவை.
பதினாறு மணிநேரம் நின்று கொண்டே
வேலைப்பார்க்கும் அந்த தொழிலாளர்களைப் பார்க்கும்போதெல்லாம்,
இவர்களைப்பற்றி அக்கறைக்கொள்ள தமிழக தொழிலாளர் நலத்துறையில் ஒரு யோக்கியன்
கூடவா அதிகாரியாக இல்லாமல் இருக்கிறான் என்று தோன்றுகிறது. இந்த கொடுமைகளை
மறைமுகமாக சுட்டிக்காட்டி அங்காடித்தெரு என்ற படமும் வந்திருக்கிறது. எந்த
நடவடிக்கையும் இல்லை. இடதுசாரி இயக்கங்கள் இந்த தொழிலாளர்கள் விசயத்தில்
ஏன் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.
தொழிலாளர்களின்
உரிமையான எட்டுமணி நேர வேலை என்பதை விடுங்கள்.. குறைந்தபட்சம் முதலில்
பதினாறு மணிநேரம் நின்றுக் கொண்டு வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு
நாற்காலியாவது போட்டுக்கொடுக்க சொல்லுங்கள் பாவிகளே..
“எடுத்துக்கோ.. எடுத்துக்கோ..
அண்ணாச்சிக்கடையில் எடுத்துக்கோ.. ”
அண்ணாச்சிக்கடையில் எடுத்துக்கோ.. ”
என்று
சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் விதவிதமான நடிகைகள் வந்து துள்ளிக் குதிப்பதை
பார்க்கும்போது, இனிமேல் கொஞ்சம் இந்த தொழிலாளர்களின் கால்களையும்
நினைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே…
அந்த கால்களிலிருந்து சரவணா ஸ்டோர் அண்ணாச்சிகளால் உறிஞ்சப்பட்ட ரத்தமே அந்த நடிகைகளிடம் கொட்டப்படும் கோடிகள்..
-கார்ட்டூனிஸ்ட்.பாலா
No comments:
Post a Comment