தியேட்டருக்குள்ள வருகிற ரசிகனை என்ன பண்றமோ இல்லயோ சிரிக்க வெச்சு அனுப்பிடணும்ங்கிற கொள்ளை கோட்பாடோட உருவாக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது யாயா. சிவாவுடன் இன்னொரு ஹீரோவாக நடித்திருக்கிறார் சந்தானம். சிவா, சந்தானம் சேர்ந்து நடித்த கலகலப்பு எற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டானது, இந்தப் படமும் அது போன்று ஹிட்டடிக்குமா?
வெட்டி ஆபீசராக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் சிவாவுக்கு தன்ஷிகாவை பார்த்ததும் காதல் பற்றிக் கொள்கிறது. காதலை அவரிடம் சொல்ல, அவர் தன்னை காதலிக்க வைப்பதற்காக சில தில்லாலங்கடி வேலைகளை செய்கிறார் சிவா. ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்க, காதலை பிரிக்க சதிவலை பின்னுகிறார் சந்தானம். அவரது தடையையும் மீறி காதலர்கள் சேர்ந்தார்களா? இல்லையா என்பது மீதி கதை.
சிவாவின் பெயரான ராமராஜன், சந்தானத்தின் பெயரான ராஜ்கிரண் இவை இரண்டுக்குமே பெயர் காரணங்கள் சொல்லி ஆரம்பிக்கிறது படம். சில இடங்களில் சின்னதாய் சிரிக்கலாம். பல இடங்களில் வெடிச்சிரிப்புக்கு உத்திரவாதம் கொடுக்கிறார்கள். சிவா சந்தானத்தை அடிக்க வரும் இடத்தில் சந்தானத்தின் அல்லக்கைகள் ஆளுக்கொரு உதாரணம் சொல்லி எஸ்கேப் ஆவது செம காமெடி. இது போன்ற சிரிப்பு சரவெடிகள் அவ்வப்போது வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன.
ஹீரோவாக வருகிறார் சிவா. இவருக்கு ஏற்ற கதாப்பாத்திரம்தான். இவருக்கு ஜோடியாக வருகிறார் தன்ஷிகா. சிவாவின் நண்பனாக வருகிறார் சந்தானம் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சந்தியா. சந்தானத்துடன் ரொமான்ஸ் காட்சியிலும் பட்டயக் கிளப்பியிருக்கிறார் அம்மணி. ரொமான்ஸ் காட்சியில் குறிப்பாக முதலிரவு காட்சியில் சந்தியாவை பாடாய் படுத்தியிருக்கிறார் சந்தானம். ஆக கடைசியில சந்தியா நெலமை இப்படியாகிப் போச்சே… சிவாவின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்டெபி இந்தப் படம் வெளிவரும் முன்பே வேறு படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகிவிட்டாராம். சிவாவின் அப்பாவாக வரும் இளவரசுவுக்கு அரசியல்வாதி அப்பா கேரக்டர். அம்மா ரேகாவோ ராமராஜனின் தீவிர விசிறியாக இருக்கிறார்.
பவர் ஸ்டாரும் படத்தில் சில காட்சிகள் வந்து ரசிகர்களை சிரிக்க வைத்து பஞ்சர் ஆக்குகிறார். கவுன்சிலராக வரும் தேவதர்ஷினி வித்தியாசமான கெட்டப்புடன் வந்து அலற வைக்கிறார். விஜய் எபினேசர் இசையில் பின்னணி இசை கதையின் ஓட்டத்துடன் நகர்கிறது. மூன்று பாடல்களை ரசிக்க முடிகிறது.
ரசிகர்களை சிரிக்க வைக்கும் எண்ணதுடன் எடுக்கப்படும் காமெடி படத்தில் என்னென்ன இருக்குமோ அது அத்தனையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜசேகரன்.
No comments:
Post a Comment